உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா? கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே; ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள். -1கொரிந்தியர் 6:19-20.
வட துருவத்தில் வாழும் எஸ்கிமோ (Eskimo) என்னும் மக்கள், பனிக்கரடியைப் பிடிப்பதற்கு தந்திரமான, ஆனால் கொடூரமான ஒருமுறையை வைத்திருக்கிறார்கள். சீல் என்னும் கடல் விலங்கைக் கொன்று, அதன் இரத்தத்தை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அதற்குள் ஒரு கூர்மையான கத்தியைப் போட்டு வைத்து விடுவார்கள். அங்கு பனி சூழ்ந்திருப்பதால் அந்த இரத்தம் மிகச் சீக்கிரத்தில் உறைந்து பனியாகிவிடும். அந்த பனி இரத்தத்தின் நடுவில் கத்தியும் உறைந்துப் போயிருக்கும். அந்த பாத்திரம் வீட்டின் வெளியே வைத்துவிடப்படும். பனிக்கரடிகளுக்கு இரத்தம் என்றால் மிகவும் விருப்பம். அதனுடைய மணத்தை வைத்து அது அந்த இரத்தம் நிறைந்த பாத்திரத்தைத் தேடி வந்துவிடும். அங்கு அந்த பாத்திரத்திலுள்ள இரத்தத்தைப் பார்த்தவுடன், அந்த பனிக்கரடி இரத்தத்தை நக்கத்துவங்கி விடும். அந்த பனி அதன் நாவை மரக்கச் செய்யும். அந்த பனிக் கரடி அதை அறியாமல் தொடர்ந்து நக்கிக் கொண்டிருப்பதால்; உள்ளே உள்ள கத்தியின் கூர்மையால், அதன் நாக்கு அறுபட்டு அதனுடைய சொந்த இரத்தமே வெளிவரத் துவங்கிவிடும். ஆனால் அதை அந்த கரடி அறியாமல் தொடர்ந்து இரத்தத்தின் சுவையை சந்தோஷமாய் நக்கிக் கொண்டே இருக்கும். கடைசியில் அதனுடைய இரத்தம் எல்லாம் வெளியேறி, மயக்கம் வரும் நிலையில் அதை எஸ்கிமோக்கள் கொண்டுப் போய் கொன்று, அதனுடைய மாம்சத்தை புசித்து, அதனுடைய தோலை தங்களுக்கு கதகதப்பான ஆடைகளாக செய்து அதைப் பிரயோஜனப் படுத்திக் கொள்வர்.
இந்த பனிக்கரடியைப் போலத்தான் சிகரெட், குடி, போதை மருந்துகளுக்கு அடிமையானவர்கள், பான்பராக் புசிப்பவர்கள், கெட்ட படங்களை பார்ப்பவர்கள், விபச்சாரத்தில் ஈடுபடுபவர்கள் இப்படி பாவத்திற்கு அடிமைகளாய்ப் போனவர்கள். இரத்தத்தைக் கண்டவுடன் அந்த பனிக்கரடி எப்படி மோப்பம் பிடித்து வந்து விடுகிறதோ, அதைப்போல பாவத்திற்கும் சிற்றின்பங்களுக்கும் அடிமையானவர்களாகி தங்களது சொந்த சமாதான வாழ்க்கை, பரிசுத்தம், ஆரோக்கியம் எல்லாவற்றையும் இழந்து, அந்த பனிக்கரடியைப்போல பரிதாபமாக பிசாசின் பிடியில் சிக்கி மடிவார்கள்.
ஒரு முறை இந்த பழக்கத்திற்கு அடிமையானவர்கள் வெளியே வருவது மிகவும் கடினம். இப்படி அடிமையாகி தங்களது குடும்ப வாழ்க்கையின் சந்தோஷத்தை இழந்தவர்களாய் நடைப்பிணமாய் வாழ்கிற மக்கள் ஏராளம். அவர்கள் வெளியே விரும்பினாலும் வர முடியாமல், தங்கள் வாழ்க்கையை நரகமாக்கி கொண்டவர்கள் அதிகம். வேத வசனம் சொல்கிறது, இந்த சரீரம் தேவனுடைய ஆலயம்| என்று. பரிசுத்த ஆவியானவர் வந்து தங்கியிருக்கிற ஆலயம் என்றுப் பார்க்கிறோம். அப்படிப்படட சரீரத்தில் பாவத்திற்கு இடம் கொடுத்து அதற்கு அடிமைகளாகிப் போனவர்களின் சரீரத்தில் ஆவியானவர் எப்படி தங்கியிருப்பார்? இயேசுகிறிஸ்துவின் சொந்த இரத்தத்தினாலே கிரயத்திற்கு கொள்ளப்பட்ட நாம் பாவத்திற்கு எப்படி நம் சரீரத்தின் அவயவங்கனை ஒப்புக் கொடுக்கலாம்?
தேவனுக்கு சொந்தமான இந்த சரீரத்தில் பாவம் செய்யாதபடி தற்காத்து, பரிசுத்த ஆலயமாக தேவனுக்கு ஒப்புக்கொடுப்போம். தேவனுக்கு உடையவைகளாகிய நமது சரீரத்தினாலும் நமது ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துவோம். இந்தப் பாவ பழக்கங்களில் சிக்கித் தவிக்கும் மக்கள் பிசாசின் பிடியிலிருந்து தப்பி வரும்படி தேவனிடம் நாம் மன்றாடுவோம்.