Bro. Johnson kennedy அவர்கள் எழுதி எனது மெயிலுக்கு வந்த அருமையான செய்தியை இங்கு பதிவிடுகிறேன்
உடனே இயேசு தம்மிலிருந்து வல்லமை புறப்பட்டதைத் தமக்குள் அறிந்து, ஜனக்கூட்டத்துக்குள்ளே திரும்பி: என் வஸ்திரங்களைத் தொட்டது யார் என்று கேட்டார். - (மாற்கு 5:30).
கர்த்தராகிய இயேசுகிறிஸ்து இந்த உலகத்தில் இருந்தபோது, இஸ்ரவேலில் உள்ள கலிலேயாவை சுற்றி அவர் செய்த அற்புதங்கள் அநேகம். மற்ற இடங்களை பார்க்கிலும் அவர் கலிலேயாவில்தான் அநேக அற்புதங்களை செய்தார். அவர் முதன்முதலாக செய்த அற்புதம் கலிலேயாவில் உள்ள கானா ஊரிலேதான். அவருடைய சீஷர்களாகிய பேதுரு அந்திரேயாவின் சொந்த ஊரும் கலிலேயாவிலுள்ள கப்பர்நகூம். கப்பர்நகூம் இயேசுவின் நகரம் என்றழைக்கப்படுகிறது. இந்த கலிலேயாவில் உள்ள கடலில் தான் அவர் நடந்து வந்து அற்புதம் செய்தார். காற்றையும் கடலையும் அடக்கினது இந்த கலிலேயா கடலில்தான். அப்படி விசேஷித்த ஊராகிய கலிலேயாவிற்கு செல்லும்போது நம் உள்ளமெல்லாம் பரவசமாவது இயற்கையே! கலிலேயாவின் தூசி படிந்த தெருக்களில் இயேசுகிறிஸ்து நடந்து சென்று கொண்டிருந்தபோது, ஜெப ஆலயத்தலைவன் ஒருவன் அவரிடம் வந்து, தன் மகளுக்காக வந்து ஜெபிக்க கேட்டு கொண்டான். அதன்படி அவர் நடந்து அவனுடைய வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோதுதான் அந்த காரியம் நடந்தது. அந்த நாட்களில் பெண்களை ஒரு பொருட்டாக எண்ணாத உலகம். இந்த நாட்களிலும் மத்திய கிழக்கு பகுதிகளில் பெண்களை ஒரு பொருட்டாக எண்ணுவதில்லை. அவர்களுக்கு தலையிலிருந்து கால் வரை கறுப்பு அங்கி தரித்து, அவர்கள் முகம் வெளியே தெரியாதவாறு அவர்கள் மூடப்பட்டு தான் வெளிஉலகத்தை காண வேண்டும். இந்த நாட்களிலேயே அப்படி என்றால் அந்த நாட்களில் இன்னும் அதிகமாக பெண்களை புறக்கணித்த நாட்கள். அதில் ஒரு பெண் பன்னிரண்டு வருடமாக அதிகமான உதிர போக்கினால் பாடுபட்டு வந்தாள். பயங்கர வேதனையும், தொடர்ந்து உதிரம் போய் கொண்டிருந்தபடியால், வெளிறிப்போய், இரத்த சோகை இருந்திருக்கலாம். அவள் தன் சொத்து பணம் எல்லாவற்றையும் வைத்தியர்களுக்கு செலவழித்தும் கொஞ்சமும் சுகமாகாத நிலைமை! 'ஒரு ஸ்திரீ விலகியிருக்கவேண்டிய காலம் அல்லாமல் அவளுடைய உதிரம் அநேகநாள் ஊறிக்கொண்டிருந்தால், அல்லது அந்தக் காலத்துக்கு மிஞ்சி அது கண்டிருக்கும் நாளெல்லாம் ஊறிக்கொண்டிருந்தால், தன் விலக்கத்தின் நாட்களிலிருந்ததுபோல அவள் தீட்டாயிருப்பாளாக. அந்த நாட்களெல்லாம் அவள் படுக்கும் எந்தப் படுக்கையும், அவள் விலக்கத்தின் படுக்கையைப்போல, அவளுக்குத் தீட்டாயிருக்கும்; அவள் உட்கார்ந்த மணையும், அவளுடைய விலக்கத்தின் தீட்டைப்போலவே தீட்டாயிருக்கும். அப்படிப்பட்டவைகளைத் தொடுகிறவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக' - (லேவியராகமம் 15:25-27). இந்த வசனத்தின்படி ஒரு பெண் உதிரம் ஊறிக்கொண்டிருந்தாள் அவள் தீட்டுப்பட்டவள். அவள் யாரையும் தொடக்கூடாது. அவளை தொட்ட யாரும் தீட்டுப்பட்டவர்களே! இந்த பெண் இயேசுகிறிஸ்துவின் சுகமாக்கும் வல்லமையை குறித்தும் அவர் அவள் இருந்த ஊரின் பக்கமாக வருகிறார் என்றும் கேள்விப்பட்டாள். அவளுக்கு அவரை எப்படியாவது தொட வேண்டும், தொட்டால் நான் சுகமாவேன் என்கிற எண்ணம் உள்ளத்தில் பெருக்கெடுக்க ஆரம்பித்தது. ஆனால் மனதிற்குள்ளே அவர் என்னை தொட்டால், அவர் தீட்டுப்பட்டுவிடுவாரே என்ற அச்சம் இருந்தது. இந்த யூத மக்கள் என்னுடைய நிலையை அறிந்தால் என்னை கல்லெறிந்து கொன்று போடுவார்களே என்று நினைத்திருந்தாள். ஆனாலும் என்ன ஆனாலும் சரி, நான் அவரை போய் தொடுவேன். நான் அவரை தொட்டால்தானே தீட்டு, அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தை மட்டும் தொட்டாலே போதும் நான் சுகமாவேன் என்று விசுவாசத்தோடு, அவர் இருந்த கூட்டத்திற்குள் செல்ல ஆரம்பித்தாள். ஒரே கூட்டம்! ஒருவரும் வழிவிடுவதாக இல்லை. ஆனால் இவளோ, மற்றவர்களை முட்டி தள்ளி கொண்டு, இயேசுவை நோக்கி செல்ல ஆரம்பித்தாள். ஒரு சிலர் அவளை திட்டினார்கள், ஏய் கிழவி, ஏன் என் காலை மிதித்து கொண்டு போகிறாய்? என்று. எதையும் பொருட்படுத்தாதவளாக அவள் இயேசு இருக்கும் இடம் வரை சென்று, கடைசியாய் அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தை தொட்டாள். என்ன ஆச்சரியம்! அவள் தொட்ட மாத்திரத்தில் தானே அவள் உதிரம் ஊறுவது நின்றது, ஒரு புதிய பெலத்தை பெற்றவளாக, கண்களில் கண்ணீர் வழிய இயேசுவே உமக்கு நன்றி என்று மனதளவில் சொல்லி கொண்டிருக்கும்போதுதானே, 'உடனே இயேசு தம்மிலிருந்து வல்லமை புறப்பட்டதைத் தமக்குள் அறிந்து, ஜனக்கூட்டத்துக்குள்ளே திரும்பி: என் வஸ்திரங்களைத் தொட்டது யார் என்று கேட்டார். அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: திரளான ஜனங்கள் உம்மை நெருக்கிக்கொண்டிருக்கிறதை நீர் கண்டும், என்னைத் தொட்டது யார் என்று கேட்கிறீரே என்றார்கள். இதைச் செய்தவளைக் காணும்படிக்கு அவர் சுற்றிலும் பார்த்தார். தன்னிடத்திலே சம்பவித்ததை அறிந்த அந்த ஸ்திரீயானவள் பயந்து, நடுங்கி, அவர் முன்பாக வந்து விழுந்து, உண்மையையெல்லாம் அவருக்குச் சொன்னாள். அவர் அவளைப் பார்த்து: மகளே, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, நீ சமாதானத்தோடேபோய், உன் வேதனை நீங்கி, சுகமாயிரு என்றார்'. - (மாற்கு 5:31-34) அவரை தொட்டபடியும் அவரை நெருக்கியபடி சென்றவர்களும் அநேகர். ஆனால் அவர்களுடைய யாருடைய தொடுதலும் இயேசுவுக்குள் எந்த மாற்றத்தையும் உண்டு பண்ணவில்லை. ஆனால் விசுவாசத்தோடு அந்த பெண் அவரை தொட்டதை, அதுவும் அவருடைய வஸ்திர ஓரத்தை தொட்டதை அவர் அறிந்தவராயிருந்தார். இந்த நாளிலும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை அறிந்தவர்கள் ஆயிரமாயிரமானவர்கள். அவரோடு நான் மிகவும் நெருக்கமாயிருக்கிறேன் என்று சொல்பவர்களும் அநேகர். ஒரு ஊழியக்காரர் சொன்னார், இயேசுகிறிஸ்து அவருடைய தோள்களின் மேல் கைளைபோட்டு, பரலோகத்தில் தோட்டத்தில் உலாவினார் என்று. இப்படி அநேகர் சொன்னாலும், அவருடைய உள்ளத்தை தொடுபவர்கள் வெகு சிலரே! இவரிடம் நான் சென்றால் இவர் என்னை சுகமாக்குவார் என்கிற விசுவாசத்தோடு சென்று அவரை தொடுபவர்களே அவரை தொடுபவர்கள்! சரீரப்பிரகாரமாக ஒருவருடன் பக்கத்தில் இருப்பதற்கும், அவருடைய உள்ளத்தை தொடுபவர்களுக்கும் வித்தியாசம் உண்டு. கிறிஸ்துவை குறித்து அறியாமலேயே, அவரை விசுவாசியாமலே அவருக்கு பக்கத்தில் இருக்கலாம், ஆனால் அவருக்கு தெரியாமல் அவரை தொட முடியாது, அதேப்போல அவரை தொட்டு சுகமடையாமல் இருப்பது என்பதும் இயலாத காரியம். ஒருவேளை நீங்கள் நினைக்கலாம், என்னை விட நன்கு ஜெபம் செய்பவர்கள் அனேகர், எனக்கு ஜெபிக்க கூட தெரியாது. இயேசுகிறிஸ்து என் ஜெபத்தை கேட்பாரா என்று. நம் உள்ளத்திலிருந்து விசுவாசத்தோடு, கண்களில் கண்ணீர் வழிய, அவர் சுகமளிக்கும் தேவன் என்று அறிந்து, அப்பா எனக்கு சுகத்தை தாரும் என்று கேட்கும்போது, அவருடைய செவிகள் அந்த ஜெபத்திற்கு திறந்தவைகளாகவே இருக்கின்றன. பதிலை கொடுப்பதற்கு அவர் வாஞ்சையுள்ளவராகவே இருக்கிறார். அந்த பெண் சுற்று சூழலை பார்க்கவில்லை, கண்டுபிடிக்கப்பட்டால், யூதர்களின் தண்டனை தன்னிடம் நிறைவேறுமே என்று நினைக்கவில்லை, விசுவாசத்தோடு, 'நான் அவருடைய வஸ்திரங்களையாகிலும் தொட்டால் சொஸ்தமாவேன்' என்று சொல்லி போய் தொட்டாள். தொட்ட மாத்திரத்தில் சொஸ்தமானாள். இந்த பெண்ணை போல நாமும் அவரை அண்டி கொள்வோமா? அவரால் சுகமாகாத வியாதி ஒன்றும் இல்லையே, அவரால் கூடாத காரியம் ஒன்றும் இல்லையே, விசுவாசத்தோடு அவரிடம் சென்று அவருடைய இருதயத்தை நம் கண்ணீரின் ஜெபத்தினால் தொட்டு, அவரிடம் மன்றாடுவோம். அவரே நமக்கு சுகத்தை தருவார். ஆமென் அல்லேலூயா!