"சபைகளில் உங்கள் ஸ்திரிகள் பேசாமலிருக்கக்கடவர்கள். பேசும்படிக்கு அவர்களுக்கு உத்தரவில்லை. அவர்கள் அமர்ந்திருக்கவேண்டும். வேதமும் அப்படியே சொல்லுகிறது. 1 கொரிந்தியர் 14 :34"
அப்போஸ்தலனாகிய பவுல் கொரிந்தியர் சபையாருக்கு எழுதும் பொழுது இவ்வாறு சொல்கிறார்.
ஒருவேளை கொரிந்தியர் சபைகளில் ஆராதனை வேளைகளில் பெண்கள் சப்தமாக பேசும் வழக்கமுடையதைப் பார்த்தோ அல்லது அறிந்தோ இவைகளை ஆலோசனையாகச் சொல்லியிருக்கலாமோ என்னவோ தெரியவில்லை.
ஏனென்றால் கொரிந்தியர்கள் பவுலடிகளாருக்கு அவ்வப்பொழுது கடிதம் எழுதித் தங்கள் சபைகளில் என்ன நடக்கிறது என்பதைத் தெரியப்படுத்துவதை I கொரிந்தியர் 7:1ன் மூலம் நாம் அறிந்து கொள்ள முடிகிறது. (நீங்கள் எனக்கு எழுதினக் காரியங்களைக் குறித்து..")
ஆனால் வேதமும் அவ்வாறு சொல்கிறது என்றும் ஒரு வார்த்தையைத் தன் Safety க்குச் சேர்த்துக் கொண்டார்..
(கவர்னர் முதல்வரின் ஆலோசனைப்படி என்று ஒரு வழக்கமான வாசகத்தைச் சேர்த்துக் கொள்வது போல..)
அவர் குறிப்பிடுவது போல் சபைகளில் பெண்கள் பேசக்கூடாது என்று வேதாகமத்தில் எங்கே சொல்லப்பட்டிருக்கிறது என்பதைத் தேடிப் பார்த்தேன்..
ஆண்டவர் யோவேல் 2:29ல் கூறுகிறார்.." ஊழியக்காரர் மேலும் ஊழியக்காரிகள் மேலும் அந்நாட்களில் என் ஆவியை ஊற்றுவேன்.." என்று.
எனில் ஆண்டவரே ஊழியக்காரிகளை சபைகளில் அங்கீகரித்திருக்கிறார்.
பெண்களுக்குள் பரிசுத்த ஆவியானவர் வரும் பொழுது .. ( யோவான் 16:8) பாவத்தைக் குறித்தும், நீதியைக் குறித்தும், நியாயத் தீர்ப்பைக் குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்..
எனில் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக் கொண்ட பெண்களும் சபையாரைக் கண்டித்து உணர்த்த முடியும்.