தேவன் திரித்துவமாக உள்ளார் என்று கிருஸ்துவர்களில் அனேகர் சொல்கின்றனர். ஆனால் இந்த திரித்துவம் என்றால் என்ன? அது எப்படி என்று பார்த்தால் அதிலும் பல பிரிவுகள், பல வேறுபட்ட கருத்துக்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் கத்தோலிக திரித்துவம். இதை பற்றி இப்போது பார்ப்போம்.
மற்ற உறுப்பினர்களும், குறிப்பாக ஜான்12, ஜான் போன்றவர்களும் இதை பற்றியும், இதிலிருந்து தாங்கள் நம்பும் திரித்துவம் எவ்வாறு வேறுபடுகிறது என்பதையும் சொன்னால் அது நன்றாக இருக்கும்.
கத்தோலிகர்களின் சில வழக்கங்கள் வேத நடைமுறைக்கு சரியில்லாததாக நான் கருதுகிறேன். அவ்வாறு இருந்தாலும் அவர்கள் வேதத்தை குறித்த தெளிவான, நியாயமான கருத்தை கொண்டவர்கள். அதாவது தங்கள் கருத்தை நியாயப்படுத்த வேறு சில பிரிவினரை போல வசனங்களை வளைப்பதில்லை.
இந்த பிரிவிலிருந்தும் தேவ பக்தியான மனிதர்கள், சேவை செய்யும் மனிதர்கள், இயேசுவிடம் பக்தி கொண்ட மனிதர்கள் வந்துள்ளனர்.
தங்கள் கருத்தை நியாயமாகவும், எந்த வசனத்தை வளைக்காமலும், இயேசுவே ஒரே தேவன் என்பதை வழ, வழ கொழ, கொழ என்று மற்ற பிரிவினரை போல் சுற்றி வளைத்து சொல்லாமல் நேரடியாக சொல்லி, அது தங்கள் விசுவாசம் என சொல்லும் திரித்துவம் பற்றின இவர்களின் கட்டுரை.
மற்ற பிரிவினர் சொல்லும் கருத்து எனக்கு புரிவதில்லை. ஆனால் இது சரியாக புரிகிறது. அதனால் மற்ற பிரிவினர் இதற்கும் தங்கள் கருத்துக்கும் என்ன வேறுபாடு என சொன்னால் அதை வைத்து அவர்கள் சொல்ல வரும் திரித்துவம் என்ன என்பதை அறிந்து கொள்ள முடியும் என கருதுகிறேன்.
இயேசு மெய்யான மனிதனும், மெய்யான இறைவனுமாய் இருக்கிறார் என்பது கிறித்தவ விசுவாசத்தின் அடிப்படைகளுள் ஒன்று. கி.பி. 325ஆம் ஆண்டு நைசியா என்னும் இடத்தில் கூடிய திருச்சங்கம் இயேசு "உண்டாக்கப்பட்டவர் அல்ல. பிதாவோடு ஒரே பொருளானவர். மெய்யங்கடவுளினின்று மெய்யங்கடவுளானவர்" என்று அறிக்கையிட்டது. அந்த விசுவாசப் பிரமாணத்தை இன்று வரையில் நாம் ஞாயிறு தோறும் அறிக்கையிடுகிறோம்.
இந்த விசுவாச அறிக்கைக்கு ஒரு பின்னணி இருக்கிறது. இயேசு கடவுள் அல்லர், மனிதர் மட்டுமே என்று சிலரும், இயேசு மனிதர் அல்லர், கடவுள் மட்டுமே என்று சிலரும் வாதிட்டுத் தப்பறையான கொள்கைகளைப் பரப்பி வந்தனர். அவ்வாறு, மூன்றாம் நூற்றாண்டில் பிரபலமான ஒரு தப்பறை "ஆரியுஸ் தப்பறை" என்றழைக்கப்படுகிறது. எகிப்து நாட்டின் அலெக்சான்ட்ரியா நகரைச் சேர்ந்த ஆரியுஸ் என்பவர்தாம் இந்தத் தப்பறையின் தலைவர். யோவான் 14:28ஐ மேற்கோள் காட்டி, இவர் கொடுத்த போதனைகள்: இயேசு இறைத் தந்தைக்குச் சமமானவர் அல்ல, அவர் வெறும் மனிதர் மட்டுமே, இயேசு தொடக்கம் முதல் இறைத்தன்மை உடையவர் அல்ல, அவர் தந்தை இறைவனால் உண்டாக்கப்பட்டவர் என்பன. நைசியாவில் கூடிய திருச்சங்கம் இப்போதனையைத் தவறு என்று கண்டித்தது. இயேசு உண்மையாகவே கடவுளும், உண்மையாகவே மனிதரும் என்று அறிக்கையிட்டது. இறை இயல்பு, மனித இயல்பு இரண்டும் இயேசுவில் நிறைவாகக் குடிகொண்டிருந்தன என்று கற்பித்தது. இப்போதனையை நாம் இன்று வரையில் ஏற்றுக்கொண்டு, அறிக்கையிட்டு வருகிறோம்.
விவிலியம் காட்டும் இயேசுவை நாம் புதிய ஏற்பாட்டை ஆழ்ந்து வாசித்தால் கண்டுகொள்ளலாம். புதிய ஏற்பாடு காட்டும் இயேசு மெய்யான மனிதராகவும், மெய்யான இறைவனாகவும் இருக்கிறார். இதுவே தொடக்க கால கிறித்தவர்களின் அனுபவமும், நம்பிக்கையுமாக இருந்தது. இயேசுவோடு வாழ்ந்து நற்செய்தி அறிவித்த திருத்தூதர்கள் இயேசுவை அவ்வாறுதான் கண்டார்கள். அவர் பாவம் தவிர மற்ற அனைத்திலும் மனிதரைப் போல வாழ்ந்தார். அவருக்குப் பசி, தாகம், களைப்பு ஏற்பட்டது. அவர் மகிழ்ச்சியுற்றார், சினம் கொண்டார், கண்ணீர்விட்டு அழுதார். அவர் பரிவு கொண்டார், அன்பை வெளிப்படுத்தினார், நட்பு பாராட்டினார். இவை அனைத்துமே அவரது மனித இயல்பை வெள்ளிடை மலையாகக் காட்டுகின்றன.
அதே வேளையில், சீடர்கள் இயேசுவிடம் இறைத் தன்மையையும் கண்டார்கள். குறிப்பாக, பேதுரு, யோவான், யாக்கோபு என்னும் மூன்று சீடர்களும் பலமுறை இயேசுவுடன் தனித்திருந்து அவரது இறை இயல்பை நேரில் கண்டார்கள். தாபோர் மலையின் உச்சியில் இயேசு தோற்றம் மாறி, மறு உருவம் அடைந்தபோது, அந்த மாட்சி மிகு காட்சியை அவர்கள் நேரில் கண்டார்கள். ஆனால், அந்த அனுபவத்தை, இயேசுவின் இறைத்தன்மையை மானிட மொழியால் அவர்களால் விவரிக்க முடியவில்லை. எனவேதான், மாற்கு நற்செய்தியில் "உலகில் எந்த சலவைக்காரனும் அதுபோல வெளுக்கமுடியாது" என்னும் விசித்திரமான உருவகத்தைப் பார்க்கிறோம். இயேசு நோயாளர்களைத் தொட்டுக் குணமாக்கியபோது, பாவிகள்மீது பரிவு கொண்டு பாவங்களை மன்னித்தபோது, எளிய மக்கள்மீது இரக்கம் கொண்டு அற்புதங்கள் பல நிpகழ்த்தியபோது, ஆயரில்லா ஆடுகள்போல் இருந்த மக்களைக் கண்டு மனமிரங்கி இறையாட்சியை அவர்களுக்கு அறிவித்தபோது, உடன் இருந்தவர்கள் அவரது தெய்வீகத் தன்மையைக் கண்டுகொண்டார்கள். இவை அனைத்திற்கும் சிகரமாக, இயேசு சிலுவையிலே தொங்கி, தன்னைத் துன்புறுத்தியவர்களை மன்னித்து, அவர்களுக்காக இறைவேண்டல் செய்து, தந்தையின் திருவுளப்படியே, தமது ஆவியைக் கையளித்து, உயிர்விட்டபோது, புற இனத்தைச் சார்ந்த நூற்றுவர் தலைவன்கூட "உண்மையாகவே இவர் கடவுளின் மகன்தான்" என்று அறிக்கையிட்டான். இயேசுவின் உயிர்ப்புக்குப் பிறகு, அவரைக் கண்டவர்கள் அவரது இறைத் தன்மையை அனுபவித்தார்கள். அவரது உயிர்ப்பைத் தொடக்கத்தில் நம்பத் தயங்கிய தோமா கூட அவரை "என் ஆண்டவரே, என் கடவுளே" என்று அழைத்தார். இவை அனைத்துமே இயேசு மெய்யாகவே கடவுளின் சாயல் என்பதற்கான சான்றுகள்.
இன்றோ இயேசு தம் மானிட இயல்பைக் களைந்துவிட்டுத் தந்தையின் வலப்புறம் அமர்ந்திருக்கிறார். அங்கே அவர் தந்தை இறைவனுடன், துணையாளரான தூய ஆவியுடன் சமமான ஆராதனையும், புகழ்ச்சியும், மாட்சியும் பெற்றுக்கொண்டிருக்கிறார். இருப்பினும், தமது மானிட வாழ்வில் அவர் கொண்டிருந்த பரிவை, இரக்கத்தைத் துறந்துவிடவில்லை. இன்றும் நமக்காகத் தந்தையின் வலப்புறம் அமர்ந்து பரிந்துபேசிக்கொண்டிருக்கிறார். தமது தூய ஆவியை நம்மீது பொழிந்துகொண்டிருக்கிறார். "உலகம் முடியும்வரை நான் எந்நாளும் உங்களோடு இருக்கிறேன்" (மத் 28:20) என்னும் வாக்குறுதிக்கேற்ப, நம்மோடு எல்லா வேளையிலும் அவர் இருந்துகொண்டிருக்கிறார்.
இயேசு நேற்று, இன்று, நாளை என்றும் வாழ்பவர், என்றும் மாறாதவர், நம்பிக்கைக்குரியவர், அன்பே உருவானவர். தந்தையோடும், தூய ஆவியோடும் ஒரே இறைவனாய் என்றும் வாழும் அவருக்கே புகழும், மாட்சியும், நன்றியும் உரித்தாகுக, ஆமென்.
-தந்தை குமார்ராஜா -
-- Edited by SANDOSH on Saturday 21st of January 2012 07:42:15 PM