இவை மூன்றும் ஒன்றா அல்லது வேறு, வேறா என்பதை அறிய இன்னும் சில காரியங்களை பார்க்க வேண்டியிருக்கிறது. இதில் சில ஆச்சரியமான, அதிர்ச்சியான விஷயங்கள் உள்ளன. விவாதம் செய்ய விரும்புகிறவர்கள் விவாதிக்கலாம்.
ஏக தேவன் இந்த உலகில் உயிரினங்களை, தன்னிடமிருந்து வெளிப்பட்ட சிருஸ்டிகரின் மூலமாக படைத்தார். அந்தப்படியே, மரங்கள், விலங்குகள் முதலியவை சிருஸ்டிகரிடமிருந்து உருவாயின. அவைகளுக்கு சிருஸ்டிகர் மட்டுமே பிதா.
ஆனால் மனிதனை படைக்கும் போது மட்டும், நாம் அவனை படைப்போம் என ஏக தேவன் சொன்னார். அதன்படியே மனிதன் சிருஸ்டிகராலும், பிதாவாகிய தேவனாலும் படைக்கப்பட்டான்.
அதாவது மனிதனின் உடல் சிருஸ்டிகராலும், அவனுள் இருக்கும் ஜீவாத்துமா பிதாவாகிய தேவனின் சுவாசத்தினாலும் உண்டானதாகும். அதனாலேயே மனிதன் மற்ற உயிரினத்தை விட உயர்ந்தவனாகவும், அவரை பிதாவே என அழைக்க தகுதி படைத்தவனாகவும் இருக்கிறான்.
சிருஸ்டிகரான இயேசு கிருஸ்து, தேவனுடைய ஒரே பேறான குமாரன் என அழைக்கப்படுகிறார். எல்லா மனிதர்களும் தேவனுடைய பிள்ளைகளாய் இருக்கும் போது இயேசு கிருஸ்து மட்டும் ஒரே பேறான குமாரன் என சொல்லபடுகிறார்.
இதற்கு காரணம் இயேசு கிருஸ்துவின் உடல் மற்றும், ஆன்மா இரண்டும் பிதாவாகிய தேவனிடமிருந்து வந்ததாகும். உடலை படைக்க வேண்டிய சிருஸ்டிகருக்கே உடல் தேவையாய் இருக்கும் போது, அதை பிதாவாகிய தேவனே சிருஸ்டித்தார். இவ்வாறு உடல், ஆன்மா என இரண்டுமே பிதாவாகிய தேவனிடமிருந்து வந்ததால் அவர் ஒரே பேறான குமாரன் என அழைக்கப்படுகிறார்.
மனிதர்களின் உடலில் ரத்தம் மட்டுமே ஓடிக் கொண்டிருக்கும். ஆனால் பிதாவினால் சிருஸ்டிக்கப்பட்ட குமாரனின் உடலில் இரத்தம் மட்டுமல்லாது, ஜலம் என்னும் ஒரு திரவமும் ஓடிக் கொண்டிருந்தது. அதனால் இவர் ரத்தத்தினாலும், ஜலத்தினாலும் வந்தவர் என அழைக்கப்படுகிறார்.
சிலுவையில் இயேசு கிருஸ்துவின் ரத்தமெல்லாம் வடிந்த பிறகும், அவரில் இருந்த ஜலத்தினால் அவரது உடல் கெட்டு போகாமல் இருந்தது. அழியாத அவரது உடலில் அவரது ஆவி திரும்ப வந்தது. அதனால் இது ஆச்சரியமான ஒரு விஷயமாக வேத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஜலமானது அவரது உடல் அழிந்து விடாமல் வாழ வைத்து கொண்டிருந்தது.
தேவனுடைய சுவாசமான மனிதனுக்கு உள்ளே இருக்கும் ஆன்மாவானது பிறப்பு, இறப்பற்றது. இன்ப, துன்பங்களை கடந்தது. அழிவில்லாதது. ஆனால் அது உடலோடு கூடி பூமியில் வரும் போது, மாயைக்கு உட்பட்டு, தன்னை இன்ப, துன்பங்கள் உடையவனாக கண்டு கொள்கிறது.
எதற்காக தேவன், இந்த துன்பமான உலகில் மனிதனை அனுப்ப வேண்டும் என பார்ப்போம். (இது இந்து, புத்த, ஜைன மற்றும் வேறு சில மதத்தில் உள்ளவர்களின் கருத்தாகும்.)
முதலில் ஒரு உதாரணத்தோடு இதை பார்ப்போம். இப்போது பூமியில் எங்குமே கண்ணாடியோ, அல்லது நம்முடைய முகத்தை பிரதிபலிக்க கூடிய எந்த பொருளோ, அல்லது ஓவியர்களோ இல்லை என வைத்து கொள்வோம். இப்போது நம்முடைய முகம் எப்படி இருக்கும் என நம்மால் தெரிந்து கொள்ள முடியாது. நம்முடைய முகத்தை பற்றின ஒரு அறிவு நமக்கு இருக்காது. அதாவது முகம் தன்னை தானே அறிந்து கொள்ள் முடியாது.
அப்படியே மனிதனுக்குள் இருக்கும் தேவ சுவாசமான, இன்ப, துன்பங்களை கடந்த ஆன்மாவை ஒரு மனிதன் அறிய வேண்டுமானால், அவன் இன்ப துன்பங்களின் வழியாக செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும் போது பல்வேறு இன்னல்களுக்கு மனிதன் உள்ளாக வேண்டியிருக்கிறது. இதனால் நானமடையும் (wisdom) மனிதன் தனக்குள் இருக்கும் இன்ப, துன்பத்தை கடந்த பேரானந்த நிலையில் இருக்கும் ஆன்மாவை அறிந்து கொள்கிறான். இவ்வாறு அதை அறிந்து கொள்ளும் மனிதன் இன்ப துன்பத்தில் இருந்து விடுபட்டு முக்தி நிலையை அடைகிறான் என சொல்கின்றனர்.
இந்த நிலையானது ஒரு துளி நீர் கடலை சென்று அடைவது போல என்று சொல்லப்படுகிறது. மனிதன் என்பவன் தேவனில் இருந்து வந்த ஆன்மாவோடு தன்னை ஐக்கியப்படுத்தி கொள்வதால் தேவனோடு கலந்து விடுகிறான் என நம்புகின்றனர்.
கிருஸ்துவை பற்றி இந்த உலகில் உள்ள மக்கள் (இஸ்ரவேலர்களை தவிர) அறியும் வரை, இன்ப, துன்பங்களை கடக்கவும், பரிசுத்த நிலையை அடையவும், மரணமில்லா பெருவாழ்வு வாழவும் இருக்கும் ஒரே வழி இதுவே என கருதப்பட்டது.
ஆனால் இந்த நிலையை அடைந்த மனிதர்கள் எத்தனை பேர் என பார்த்தால் அவர்கள் இலட்சத்தில் ஒருவர் என்ற அளவிலேயே இருந்ததாக தெரிய வருகிறது.
ஏனெனில் அனேகர் மாயையை விட்டு தங்களை தூரப்படுத்தி கொள்ளவோ, உண்மையானதை அறியவோ விரும்பவில்லை. இவ்வாறு இந்த நிலையை அடைந்தவர்கள், மற்ற மக்களும் இதை அடைய வழிகளை கண்டுபிடித்தனர். அவர்களுக்கு வழி காட்டினர். அவர்களை சீடர்களாக ஏற்று கொண்டு போதித்தனர்.