மென்சா என்னும் குழுவில் அதிக அறிவுள்ளவர்களே சேர்த்து கொள்ளப்படுவார்கள். அவர்களுடைய I.Q. 140 க்கு மேல் இருக்கும். சமீபத்தில் அந்த குழுவை சேர்ந்தவர்கள் ஒரு கூட்டத்தை ஆயத்தப்படுத்தி இருந்தார்கள். அவர்களில் சிலர், கூட்டம் முடிந்தபிறகு சாப்பிடுவதற்கு பக்கத்தில் ஒரு ஹோட்டலுக்கு சென்றார்கள். அங்கு அவர்கள், உப்பு இருந்த பாட்டிலில் மிளகு பொடியும், மிளகுபொடி இருந்த பாட்டிலில் உப்பும் இருந்ததை கண்டார்கள். இவர்கள்தான் அறிவாளிகளாச்சே, என்ன செய்வது என்று யோசித்து, யோசித்து, கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தார்கள். அதன்படி, ஒரு பேப்பர் டவலில் உப்பை கொட்டி, அதை மாற்றுவது என்று முடிவெடுத்தார்கள். அப்போது அந்த வழியாக வந்த பணிப்பெண்ணிடம், இப்;படி பாட்டில்கள் மாறி இருக்கிறது என்று கூறினார்கள். அப்போது அந்த பணிப்பெண், 'ஐயோ சாரி! மன்னியுங்கள்' என்று சொல்லி விட்டு, மிளகு பொடியில் இருந்த மூடியை எடுத்து, உப்பு பாட்டிலிலும், உப்பில் இருந்த மூடியை எடுத்து மிளகு பொடி பாட்டிலிலும் மாற்றி வைத்து விட்டு போனாள். அங்கிருந்த அறிவாளிகள் அசடு வழிந்தார்கள்.
உலகத்தின் ஞானமும் அப்படிதான் இருக்கிறது. இன்று மனிதன்
சொல்கிறான், சந்திரனில் காலடி எடுத்து வைத்து விட்டோம், எங்கள் சாட்டிலைட் மார்ஸை சுற்றி வந்து போட்டோ எடுத்து வருகிறது, எங்கள் கம்பியூட்டரினால் செய்ய முடியாத காரியம் எதுவுமில்லை என்று தம்பட்டம் அடித்து கொள்கிறான். இத்தனை செய்கிற நாம், உலகத்தில் காணப்படும் பிரச்சனைகளுக்கு ஏதாவது தீர்வு கண்டு பிடித்திருக்கிறோமா? Global Warming - யை தடுப்பதற்கு முயற்சிகள் எடுப்பதும், Climate Summit கூட்டி சேர்ப்பதும், தேசங்களில் சமாதானம் ஏற்படுத்த பேச்சு வார்த்தைகள் நடத்துவதும் மனிதனின் மிகப்பெரிய பிரச்சனைகளுக்கு தீர்வாகாது. உலகின் ஞானிகள் என்று சொல்லுகிறவர்கள், பிரச்சனைகளின் மூலக்காரணமான தேவனை விட்டு பிரிந்து இருப்பதைக் குறித்து அறியாதவர்களாக, அறிந்தும் அதை கண்டும் காணாதவர்களாக கண்களை மூடிக்கொண்டு இருக்கிறார்கள்.
இன்று கிறிஸ்தவ நாடுகள் என்று சொல்லிக் கொள்கிற மேலை நாடுகளின் நிலைமை மிகவும் மோசமானது. தேவனை தேடாதபடி, தங்கள் வாழ்க்கையில் கிறிஸ்து என்றால் யார் என்று கேட்கிறவர்களாக பெயர் கிறிஸ்தவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் நிலைமை. தேவன் அருவருக்கிற அத்தனை அக்கிரமங்களையும் அளவுக்கு மீறி செய்து கொண்டிருக்கிற நாடுகள்! தேவ காரியங்களை குறித்து எச்சரித்து கொண்டிருக்கிற தேவ ஊழியர்கள் ஒரு புறமிருக்க, பாவத்தை தண்ணீரை போல குடித்து கொண்டிருக்கிற மக்கள். தேவ கோபம் இறங்குவதற்கு முன், அந்த மக்கள் மனம் திரும்ப மாட்டார்களா என்று ஏக்கத்தோடு பார்த்து கொண்டிருக்கிற தேவன், 'என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு ஷேமத்தைக்கொடுப்பேன்' - (2நாளாகமம் -7:14)
என்று தேவன் வாக்கு பண்ணியிருக்க, அவருடைய நாமத்தை தரித்திருக்கிற அவருடைய மக்களோ, தங்கள் தேசத்தின் ஷேமத்தை குறித்து கவலையற்றவர்களாக கர்த்தருடைய முகத்தை தேடாதபடி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். 'கர்த்தர் எல்லா இருதயங்களையும் ஆராய்ந்து, நினைவுகளின் தோற்றங்களையெல்லாம் அறிகிறார்; நீ அவரைத் தேடினால் உனக்குத் தென்படுவார்; நீ அவரை விட்டுவிட்டால் அவர் உன்னை என்றைக்கும் கைவிடுவார்' (1நாளாகமம் 28:9ம் வசனத்தின் பின்பாகம்) என்று உறுதியாக எச்சரித்திருக்க, அவர்கள் தேவனை விட்டுவிட்டபடியினால், அவரும் அவர்களை கைவிடும் நிலைமையை அவர்களே ஏற்படுத்தியிருக்கிறார்கள்.
இந்த தேசங்களில் வாழும் உண்மையான கிறிஸ்தவ ஜனம் கர்த்தரை நோக்கி திறப்பின் வாசலில் நின்று கர்த்தரிடத்தில் அந்த நாடுகளுக்காக நின்று கதற வேண்டும். தேவன் உங்களை அந்த தேசத்திற்கு கொண்டு சென்ற நோக்கம் ஒருவேளை அதுவாக இருக்கலாமே!
தேவனை பற்றி கொள்ளாதவரை தேசத்தில் சமாதானம் ஒருநாளும் வராது. பிரச்சனைகளுக்கு தீர்வு ஒருநாளும் ஏற்படாது. ஆயிரம் முறை நாடுகளை சேர்த்து வைத்து, திட்டங்களை தீட்டினாலும,; சமாதான பேச்சு வார்த்தைகளை பேசினாலும் சமாதானம் ஒரு நாளும் ஏற்படாது. தங்களை தாழ்த்தி, ஜெபம் பண்ணி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டு திரும்பினால், தேவன் அவர்களுடைய ஜெபத்தை கேட்டு, அவர்கள் தேசத்திற்கு ஷேமத்தை கொடுப்பார். இல்லாவிட்டால் எதிர்மறை காரியங்களே ஏற்படும். இந்த கடைசி நாட்களில் கர்த்தரை பற்றி கொள்வோம். அவரே நமது பிரச்சனைகளுக்கு பதில். அவரே சமாதான காரணர், அவரே நம் தேசத்திற்கு ஷேமத்தை கொடுப்பவர். ஆமென் அல்லேலூயா!
என் ஞானம் கல்வி செல்வங்கள் யாவும்
ஒன்றுமில்லை குப்பை என்றெண்ணுகிறேன்
என் நீதி நியாயங்கள் அழுக்கான கந்தை
என்றே உணர்ந்தேன் என் இயேசுவே
அனுதினமும் உம்மில் நான் வளர்ந்திடவே
உம் அனுக்கிரகம் தர வேண்டுமே
ஜெபம்: எங்களை நேசித்து வழி நடத்தும் நல்ல தகப்பனே, உலக ஞானம் உமக்கு முன்பாக ஒன்றுமில்லை ஐயா. அப்போஸ்தலனாகிய பவுல் சொல்வது போல எங்களுக்கு லாபமாயிருந்தவைகளெவைகளோ அவைகளைக் கிறிஸ்துவுக்காக நஷ்டமென்று எண்ண எங்களுக்கு கிருபை செய்யும். எங்கள் தேசங்களுக்கு ஷேமத்தை கொடுக்கும்படியாய் நாங்கள் ஒவவொருவரும் எங்கள் தேசங்களுக்காக திறப்பின் வாசலில் நின்று ஜெபிக்கிறவர்களாய் மாற்றும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.