இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: உண்மைக் காதலின் உன்னதக் காவியம்(உன்னதப்பாட்டின் உண்மைகள்)


இளையவர்

Status: Offline
Posts: 21
Date:
உண்மைக் காதலின் உன்னதக் காவியம்(உன்னதப்பாட்டின் உண்மைகள்)
Permalink  
 


பரிசுத்த வேதாகமத்திலுள்ள புத்தகம் 66 புத்தகங்களிலும் அதிக சர்ச்சைக்குரியதும், கிறிஸ்தவர்களால் பலதரப்பட்ட வித்தியாசமான முறைகளில் வியாக்கியானம் செய்யப்பட்டு வருவதுமான புத்தகம் “சாலொமோனின் உன்னதப்பாட்டு“ என்றால் மிகையாகாது. கிறிஸ்தவ உலகில் அதிகளவு வியாக்கியான நூல்கள் இப்புத்தகத்திற்கு எழுதப்பட்டுள்ள போதிலும் (1) இதன் அடிப்படைச் செய்தியை முழுமையாக அறியாதவர்களாகவே கிறிஸ்தவர்கள் இருக்கின்றனர் என்பதை மறுப்பதற்கில்லை. இதற்குக் காரணம், உன்னதப்பாட்டிற்கு எழுதப்படும் வியாக்கியான நூல்கள் ஒன்றுக்கொன்று முரண்பட்ட கருத்துக்களையும் விளக்கங்களையும் கொண்டிருப்பதேயாகும். இதனால், எழுதப்பட்டுள்ள வியாக்கியான நூல்கள் உன்னதப்பாட்டுப் புத்தகத்தின் விடயங்களை மக்களிற்குச் சரியான விதத்தில் அறியத்தருவதற்குப்; பதிலாக, அவர்களுக்கு அதிக குழப்பத்தையே ஏற்படுத்தியுள்ளன. எனவே, உன்னதப்பாட்டுப் புத்தகத்தின் சரியான விளக்கத்தையும், இப்புத்தகத்தின் மூலம் தேவன் நமக்குக் கற்பிக்கும் சத்தியங்களையும் அறிந்து கொள்வதற்கு, இதுவரைகாலமும் இப்புத்தகத்திற்கு கொடுக்கப்பட்டு வந்துள்ள வியாக்கியான முறைகளை ஆராய்ந்து பார்க்க வேண்டியது அவசியமாய் உள்ளது.


1. உன்னதப்பாட்டின் கருத்து
உன்னதப்பாட்டிற்கு கொடுக்கப்பட்டுள்ள விளக்கங்களில் கிறிஸ்தவ உலகில் அதிகம் பிரபலமடைந்து வந்துள்ள வியாக்கியான முறை “மறைபொருள் அர்தத விளக்கம்’என்று அழைக்கப்படுகின்றது. அதாவது, உன்னதப்பாட்டில் எழுதப்பட்டுள்ள விடயங்கள் நேரடியாகச் சொல்லப்படாத மறைவான, ஆழமான ஆவிக்குரிய அர்ததங்களைக் கொண்டுள்ளது என்பதே இவ்வியாக்கியான முறையின் தாற்பரியமாகும்.(2) கி.பி.16ம் நூற்றாண்டில் சபைசீர்திருத்தம் ஏற்படும் வரை கிறிஸ்தவர்கள் உன்னதப்பாட்டை இவ்விதமாகவே வியாக்கியானம் செய்து வந்துள்ளனர். இதன்படி இயேசுகிறிஸ்துவிற்கும் சபைக்கும் இடையிலான உறவை மறைபொருளாகக் கொண்ட பாடலாக உன்னதப்பாட்டு எழுதப்பட்டுள்ளதாகக் கருதப்படுகின்றது. யூதர்களோ, தேவனுக்கும் தங்களுக்கும் இடையிலான இடையிலான உறவை வர்ணிக்கும் பாடலாக உன்னதப்பாட்டு இருப்பதாகக் கூறுகின்றனர். (3) எனினும், சில யூதர்கள், சாலொமோன் ஞானத்தை நேசிப்பதை உருவகிக்கும் பாடலாக உன்னதப்பாட்டை வியாக்கியானம் செய்துள்ளனர்.(4) இதன்படி, பாடலில் வரும் பெண், ஞானத்தை உருவகிக்கும் விவரணமாய் இருக்கின்றாள். பாரம்பரிய ரோமன் கத்தோலிக்க சபையினர், உன்னதப்பாட்டில் வரும் பெண்ணைக் கன்னி மரியாளாக வர்ணித்துள்ளனர். (5) இவர்களைப் பொருத்தவரை உன்னதப்பாட்டு கன்னி மரியாளின் பரிசுத்த அழகைப் போற்றிப் பாடும் பாடலாகும்.(6) இதனால், உன்னதப்பாட்டு 4:7ல், ‘நீ பூரண ரூபவதி. உன்னில் பழுதொன்றுமில்லை’ என்பதை மரியாளின் பாவமற்ற தன்மையைப் பற்றிய விவரணமாக இவர்கள் விளக்கியுள்ளனர்.(7) மரியாளின் மீதான தேவனுடைய அன்பைப் பற்றிய பாடலாக உன்னதப்பாட்டு இருக்கின்றது என்பதே இவர்களது கருத்தாகும்.(8) எனினும், இத்தகைய மறைபொருள் அர்ததவிளக்கங்கள் உன்னதப்பாட்டில் சொல்லப்பட்டுள்ள விடயங்களை தாறுமாறாக்கும் தவறான வியக்கியானங்களாகவே உள்ளன. மேலும், இது மானிட நம்பிக்கைகளையும் உபதேசங்களையும் இப்பாடலுக்குள் பலவந்தமாகப் புகுத்தும் விளக்க முறையாகவே உள்ளது.

அண்மைக் காலத்தில் சில வேத ஆராய்ச்சியாளர்கள், இப்பாடலை கானானிய தெய்வங்களான பாகாலுக்கும் அஸ்தரோத்திற்கும் இடையிலான அன்பைப் பற்றிய விவரணமாகவும் விளக்கியுள்ளனர். சிலர், அக்காலத்தைய புராணங்களில் காணப்படும் மற்றும் “பாகால்’ தெய்வங்களோடு தொடர்புடைய பாடலாக உன்னதப்பாட்டைக் கருதுகின்றனர். அக்காலத்தைய புறமத தெய்வ வழிபாடுகளோடு சம்பந்தப்பட்ட பாடல்கள் பாலியல் விடயங்களைக் கொண்டிருப்பதனால், உன்னதப்பாட்டும் இத்தகைய ஒரு பாடல் என்று இவர்கள் கூறுகின்றனர்.(10) எனினும், இவ்வேத ஆராய்சசியாளர்கள் சுட்டிக்காட்டுகின்ற விதமான ஒற்றுமைகள் உன்னதப்பாட்டிற்கும் பாலியலோடு தொடர்புடைய அக்காலத்தைய புராண தெய்வங்களின் வழிபாட்டுச் சடங்காச்சாரங்களில் இல்லை.(11) இப்பாடலில் புறமதத் தெய்வங்களைப் பற்றியே உன்னதப்பாட்டில் சித்தரிக்கப்பட்டுள்ளது என்பதற்கு ஆதாரமாக சில வேத ஆராய்சசியாளாகள் ஆணின் சரீரம் உலோகங்களினால் செய்யப்பட்டதாக உன்னதப்பாட்டு 5:11-15ல் குறிப்பிடப்பட்டிருப்பதாகவும், பெண்ணின் கழுத்து கோபுரமாகச் (உன்.4:4) சித்தரிக்கப்பட்டிருப்பதாகவும் கூறுகின்றனர். (12) உன்னதப்பாட்டில் பெண்ணின் மூக்கு கோபுரத்தைப் போல இருப்பதும், தெய்வத்தைப் பற்றிய விவரணத்திற்கான ஆதாரமாகக் கருதப்படுகின்றது.(13) ஆனால், உன்னதப் பாட்டில் உள்ள இத்தகைய உருவக விவரணங்களைச் சொல்லாத்தமாக விளக்கி அவை தெய்வச் சிலைகளைப் பற்றிய குறிப்பு என்று கூறுவது அர்ததமற்றது. மேலும், வேதாகமத்திலுள்ள ஒரு புத்தகத்தைப் புறமத தெய்வங்களோடு தொடர்புடையதாக வியக்கியானம் செய்வது அர்த்தமற்றது. உன்னதப்பாட்டிற்கும், அக்காலத்தைய பறமதத் தெய்வங்களோடு சம்பந்தப்பட்ட பாடல்களிற்கும் இடையில் இருக்கும் வித்தியாசங்கள், உன்னதப்பாட்டை புறமதப்பாடல்களின் தழுவல் என்றும், புறமதத் தெய்வவழிபாட்டோடு சம்பந்தப்பந்தப்பட்ட பாடல் என்றும் எவ்விதத்திலும் விளக்க முடியாததற்கான ஆதாரமாக உள்ளது.(14)

சில வேத ஆராய்ச்சியாளர்கள் உன்னதப்பாட்டை அக்காலத் திருமண வைபவத்தில் பாடப்படும் பாடலாகவே எழுதப்பட்டதாகக் கருதுகின்றனர்.யூதர்களுடைய திருமண வைபவங்கள் ஒருவார காலத்திற்கு நடைபெற்றமையால் அக்காலத்தில் மணமகனும் மணமகளும், அரசனையும் அரசியையும் போல தங்களை அலங்கரித்துக் கொண்டு, பலவிதமான நடனங்களில் ஈடுபடுவார்கள் என்றும் இத்தகைய நடனங்களில் மணமக்கள் ஒருவரையொருவர் புகழ்ந்து பாடல்கள் பாடுவதற்காக எழுதப்பட்ட பாடல்களே உன்னதப்பாட்டுப் புத்தகத்தில் உள்ளதாகக் கூறப்படுகின்றது.(15) எனினும், இவர்கள் தங்களது கருத்திற்கு ஆதரமாக பிற்காலத்தைய அரேபிய மக்களது திருமண வைபவங்களையே உதாரணமாகக் காண்பிக்கின்றமையால், இவர்களது விளக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் உள்ளது. (16) மேலும், உன்னதப்பாட்டுப் புத்தகத்தின் பாடல்கள் திருமண வைபவத்தைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்படவில்லை. பாடல்களின் மொழிநடை அவை பகிரங்கமாகப் பாடக் கூடியவைகளாக இல்லை என்பதை அறியத்தருகின்றது (17) . அத்தோடு, அக்காலத்தில் திருமணவைபவம் நடைபெறும் ஏழு நாட்களுக்கான பாடல்களாக உன்னதப்பாட்டை ஏழு பகுதிகளாகப் பிரிக்கவும் முடியாதுள்ளது.(18) உன்னதப்பாட்டில் திருமணத்தைப் பற்றி சில பகுதிகள் இருப்பது உண்மை என்றாலும் முழுப் புத்தகத்தையும் திருமண வைபவத்திற்கான பாடலாகக் கருதமுடியாது. சில வேத ஆராய்சசியாளர்கள் உன்னதப்பாட்டை மரண சடங்காச்சாரங்களின் போது பாடுவதற்கான பாடல்கள் என்றும் கூறுகின்றனர். அக்காலத்தைய மரண சடங்காச்சாரங்கள், மதுபானம், பெண்கள், பாடல்கள் என்பவற்றுடன் கொண்டாடப்படும் வைபவங்களாக இருந்தன என்று கூறும் இவர்கள், இத்தகைய மரண சடங்காச்சார வைபவத்திற்காகவே உன்னதப்பாட்டில் உள்ள பாடல்கள் எழுதப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர்.(19) இத்தகைய வியாக்கியானத்திற்கு ஆதாரமாக உன்னதப்பாட்டு 8:6ல் குறிப்பிடப்பட்டுள்ள ‘நேசம் மரணத்தைப் போல் வலிது, நேச வைராக்கியம் பாதாளத்தைப் போல் கொடிதாயிருக்கிறது.’’ என்னும் வாக்கியம் உபயோகிக்கப்படுகிறது. அன்பினால் மட்டுமே மரணத்தை மேற்கொள்ளமுடியும் என்று கூறும் வேத ஆராய்சசியாளர்கள், மரண சடங்காச்சாரங்களில் பாடுவதற்கான பாடலாக உன்னதப்பாட்டு இருப்பதற்கான ஆதாரமாக இவ்வசனம் உள்ளதாகக் கூறுகின்றனர்.(20) மேலும், உன்னதப்பாட்டு 5:1ல் குறிப்பிடப்பட்டிருக்கும் பொருட்கள் பிரேதத்தை அபிஷேகிப்பதற்கு உபயோகிக்கப்படுபவை என்பதனால் இதுவும் இவ்விளக்கத்திற்கான ஆதாரமாகச் சுட்டிக்காட்டப்படுகின்றது. (21) ஆனால், மரணம் மனிதனைத் தன் கட்டுப்பாட்டின் கீழ் வைத்தருப்பதைப் போலவே அன்பும் மனிதனைத் தன்னிடத்தில் வைத்துக்கொள்ளும். அது மனிதனை மறுபடியுமாக வெளியே செல்ல அனுமதிக்காது என்பதே உன்னதப்பாட்டு 8:6ன் விளக்கமாகும். எனவே இவ்வசனத்தை ஆதாரமாகக் கொண்டு உன்னதப்பாட்டை மரண சடங்காச்சாரப் பாடல்கள் எனறு கூறுவது அர்த்தமற்ற ஒரு விளக்கமாகவே உள்ளது.

தெய்வத்திற்கும் தமக்கும் இடையிலான அன்பை அல்லது உறவைப் பற்றிய பாடலாக உன்னதப்பாட்டை வியாக்கியானம் செய்பவர்கள் அனைவரும் இப்புத்தகத்தின் செய்தி ஆவிக்குரியது என்று கூறினாலும், புத்தகத்தின் விடயங்கள் ஒவ்வொன்றும் எதைக் குறிக்கின்றது என்பது பற்றி இவர்கள் கருத்து முரண்பாடுடையவர்களாகவே இருக்கின்றனர். இதனால், ஒவ்வொரு வசனத்திற்கும் எவர் கொடுக்கும் விளக்கம் சரியானது என்பதை அறிந்து கொள்ள முடியாமல் உள்ளது. உதாரணத்திற்கு உன்னதப்பாட்டு 4:5ல் சித்தரிக்கப்பட்டுள்ள பெண்ணின் மார்பகங்களை (22) யூதர்கள் வியாக்கியானம் செய்யும் போது, சிலர் இவையிரண்டும் மோசேயையும் ஆரோனையும் குறிப்பதாக விளக்கியுள்ள போதிலும், ஏனையவர்களில் சிலர் இவற்றை மோசேயும் பினெகாஸ்சும் என்றும், வேறு சிலர் யோசுவாவும் எலெயேசரும் என்றும், இன்னும் சிலர் மேசியா தாவீதின் குமாரனாகவும் எப்பிராயீமின் குமாரனாகவும் (23) இருப்பதை அறியத்தருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். (24) இதைப் போலவே கிறிஸ்தவர்கள் இவ்வசனத்தை வியாக்கியானம் செய்யும் போதும், பெண்ணின் மார்பகங்கள் இரண்டும் நாம் ஆவிக்குரிய உணவை உட்கொள்ளும் சபை என்று சிலர் கூறுகையில், வேறு சிலர் இவை இரண்டையும் வேதாகமத்தின் இரு ஏற்பாடுகளாகவும், தேவனுடைய இரு பிரதான கற்பனைகளான தேவனையும் அயலானையும் நேசிக்கும் கட்டளைகளாகவும், இயேசுகிறிஸ்து சிலுவையில் மரிக்கும் போது அவரது விலாவிலிருந்து வந்த இரத்தமாகவும் தண்ணராகவும் இருப்பதாகவும் வியாக்கியனம் செய்துள்ளனர்.(25) இவையிரண்டும் விசுவாசி தேவனோடு இணைவதற்கு உதவியாயிருக்கும் அவனது விசுவாசமும் அன்பும் என்றும் சிலர் விளக்கியுள்ளனர்.(26) இதனால் உன்னதப்பாட்டு 4:5ற்கு எவ்விளக்கம் சரியானது என்பதை அறியமுடியாத நிலை தோன்றியுள்ளதை மறுப்பதற்கில்லை.
(வளரும்)

Footnote References
(1) கிறிஸ்தவ சரித்திரத்தின் முதல் 17 நூற்றாண்டுகளிலும் 500ற்கும் அதிகமான வியாக்கியான நூல்கள் இப்புத்தகத்திற்கு எழுதப்பட்டுள்ளதாகக் கணிப்பிடப்பட்டுள்ளது (R.B.Dempsey, The Spiritual Marriage: The Exegetic History and Literary Impact of the Song of Songs in the Middle Ages, p. 10). கி.பி.17ம் நூற்றாண்டிற்குப் பின்பும் உன்னதப்பாட்டிற்குப் பல வியாக்கியான நூல்கள் வெளிவந்துள்ளன.

(2) ஆங்கிலத்தில் இவ்வியாக்கியான முறை ‘அலகோரிக்கல் இன்ட(ர்)பிரிட்டேஷன்’’ (Allegorical Interpretation) என்று அழைக்கப்படுகின்றது. ஆங்கிலத்தில் ‘அலகெரி’’ ((allegory) என்னும் பதம் ‘அல்லொஸ்’’ (allos) ‘அகொரெயோ’’ (agoreyo) என்னும் இருபதங்களின் சேர்க்கையினால் உருவாகியுள்ளது. இவற்றில் ‘அல்லொஸ் என்னும் பதம் ‘மற்றையது’’ என்றும் ‘அகொரெயோ’’ என்னும் பதம் ‘பேசுதல்’’ அல்லது ‘அறிவித்தல்’ என்னும் அர்த்தங்களைக் கொண்டுள்ளது. எனவே இவ்விருபதங்களும் ஒன்றாகச் சேர்க்கப்படும் போது, ‘மற்றதைப் பேசுதல்’’ அல்லது ‘மற்றதை அறிவித்தல்’ என்னும் அர்த்தத்தைத் தருகின்றது. எனவே ‘அலகெரி’’ (allegory) என்னும் பதம் ‘ஒன்றைச் சொல்லுதல் ஆனால் அதில் வேறொன்றை அறிவித்தல்’’ என்பதாகும். இலக்கியங்களில் இத்தகைய சொற்பிரயோகம் விரிவுபடுத்தப்பட்ட உருவகமாக உள்ளது. அதாவது உபயோகிக்கப்பட்டுள்ள உருவகங்களை விரிவுபடுத்தி உருவகத்தின் ஒவ்வொரு பகுதிக்கும், விவரணத்திற்கும் அர்த்தம் கற்பித்தலாகும். எனவே, இலக்கியங்களை `அலகெரி’ முறையில் வியாக்கியானம் செய்தல் என்பது, எழுதப்பட்டுள்ளவற்றின் நேரடியான வார்த்தைகளுக்கு, மொழியில் உள்ள இயற்கையான சொல்லர்த்தத்தின்படி அவற்றை விளக்காமல், அவற்றிற்கு வேறு அர்த்தங்களைக் கொடுத்தலாகும். அதாவது வேதப் பகுதிகளை அவற்றின் சரித்திர மற்றும் மொழியியல் விடயங்களைக் கருத்திற் கொள்ளாமல், அவற்றில் மறைவானதும் ஆழமானதுமான ஆவிக்குரிய அர்த்தம் இருப்பதாகக் கருதி மொழியில் அவற்றிற்கு இருக்கும் அர்த்தத்திற்கும் அப்பால் வேறு அர்த்தங்களைக் கற்பித்தலாகும் (A.B.Mickelsen, Interpreting the Bible, pp. 230- 235; D.S.Dockery, Biblical Interpretation: Then and Now, pp. 27-41, 75-102).

(3) யூதமத நூல்களான “மிஷனா“, ‘தல்மூட்’ மற்றும் “தாகும்ஸ்“ போன்றவற்றில் உன்னதப்பாட்டிற்கு கொடுக்கப்பட்டுள்ள இத்தகைய வியாக்கியான முறையை நாம் அவதானிக்கலாம். தாகும்ஸ் என்னும் நூல், இஸ்ரவேல் மக்களது சரித்திரத்தின் ஐந்து காலப் பகுதிகளைப் பற்றிய பாடலாக உன்னதப்பாட்டைப் பின்வருமாறு செய்துள்ளது. (1) 1). இஸ்ரவேல் மக்கள் எகிப்திலிருந்து புறப்படுதல், சீனாய் மலை, வாக்குத்தத்த பூமியைக் கைப்பற்றுதல் (1:2-3:6). 2). சாலொமோனுடைய ஆலயம் (3:7-5:11). 3). இஸ்ரவேல் மக்களது பாவமும் சிறைப்படுதலும் (5:2-6:1). 4). சிறையிருப்பிலிருந்து திரும்பி வருதலும் ஆலயத்தை மறுபடியும் கட்டுதலும் (6:2-7:11). 5). ரோம ராட்சியக் காலத்தில் சிதறடிக்கப்படுதலும் மேசியாவை எதிர்பார்த்திருத்தலும் (7:12-8:14) (R.Loewe, "Apologetic Motifs in the Targum on the Song of Songs" in Biblical Motifs: Origins and Transformations, pp. 159-196).இத்தகைய வியாக்கியான முறையை அடிப்படையாகக் கொண்டு கிறிஸ்தவர்கள் உன்னதப்பாட்டு 1:14:6ஐ தாவீதின் காலம் முதல் இயேசுகிறிஸ்துவின் மரணம் வரையிலான சபையினுடைய சரித்திரம் என்றும், 4:7-8:14ஐ, கி.பி.34 முதல் இயேசுகிறிஸ்துவின் இரண்டாவது வருகை வரையிலான சரித்திரம் என்றும் குறிப்பிட்டுள்ளனர். சிலர் முழுப் புத்தகத்தையும் சபையின் சீர்திருத்த காலத்தைப் பற்றிய சரித்திரம் என்று விளக்கியுள்ளனர். இவர்கள் ‘உன் மூக்கு தமஸ்குவின் திசையை நோக்கியிருக்கும் லீபனோனின் கோபுரத்தைப் போலவும் இருக்கிறது’’ (உன்.7:4) என்பதை சபை சீhதிருத்தவாதி மாட்டின் ; லூத்தரின் மூக்கைப் பற்றிய விவரணம் என்றும், சபை சீhதிருத்தத்தின் விடிவெள்ளியாகக் கருதப்படும் ; ஜோன் வைக்கிளிஃப் உன்னதப்பாட்டு 6:4ல் கொடிகள் பறக்கும் படையைப் போல் இருப்பதாகச் சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர் (Cited in M.H.Pope, Song of Songs: Anchor Bible Commentary, pp. 128-129; H.H.Rowley, "Interpretation of the Song of Songs" in The Servant of the Lord and Other Essays, p. 200; R.W.Orr, Song of Songs: New International Bible Commentary, p. 702).

(4) இத்தகைய விளக்கம் கி.பி.16ம் நூற்றாண்டிலேயே உருவானது. இதில் பாடலில் வரும் பெண்ணுக்கு மட்டுமே மறைபொருள் அர்த்த விளக்கத்தின்படி விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளது

(5) (Cf. M.H.Pope, Song of Songs: Anchor Bible Commentary, p. 110). 5 Cf. R.E.Murphy, Ecclesiastes and Song of Songs: Pamphlet Bible Series Volume 30, pp. 24-25.

(6) தற்கால ரோமன் கத்தோலிக்க வேதஆராய்ச்சியாளர்கள் இத்தகைய விளக்கத்தை ஏற்றுக் கொள்ளாத போதிலும், நீண்டகாலமாக மரியாளைப் போற்றிப் புகழும் பாடலாகவே உன்னதப்பாட்டை ரோமன் கத்தோலிக்க சபை வியாக்கியானம் செய்து வந்துள்ளது
M.H.Pope, Song of Songs The Anchor Bible Commentary, pp. 188-192).

(7) Cited in G.L.Carr, The Song of Solomon: Tyndale Old Testament Commentaries, p. 26.

( 8) Cited in R.B.Zuck, “A Theology of the Wisdom Books and the Song of Songs” in A Biblical Theology of the Old Testament, p. 254.

(9) A.Farstad, Literary Genre of the Song of Songs, pp. 48-60.

(10) T.Meek, “The Song of Songs and the Fertility Cult” The Song of Songs: A Symposium, pp. 48-79.

(11) N.Schmidt, “Is Canticles an Adonis Liturgy” in Journal of the American Oriental Society. 46 (1926), pp. 154-164.

(12) M.H.Pope, Song of Songs: Anchor Bible Commentary, pp. 465, 548.

(13) M.H.Pope, “Metastases in Canonical Shapes of the Super Song” in Canon, Theology, and Old Testament Interpretation, pp. 322-323.

(14) அக்கால புறமத தெய்வங்களோடு சம்பந்தப்பட்ட பாடல்களைப் போலவே இயற்கையைப் பற்றிய வர்னணைகள் உன்னதப்பாட்டிலும் உள்ள போதிலும், இவை வெறும் வர்னணைகளாக மட்டுமே எழுதப்பட்டுள்ளன. அக்கால புறமதத் தெய்வப்பாடல்களில் உள்ளவிதமாக உன்னதப்பாட்டில் இயற்கை தெய்வமாகச் சித்தரிக்கப்படவில்லை. மேலும், திராட்சைரசத்தைப் பற்றி உன்னதப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், அக்கால புறமதத் தெய்வப்பாடல்களைப் போல குடிபோதைக்கும் ஒழுக்கவீனங்களிற்கும் முக்கியத்துவம் கொடுத்து உன்னதப்பாட்டு எழுதப்படவில்லை. திருமணத்தின் தூய்மையையும், உண்மை அன்பையும் உன்னதப்பாட்டு வலியுறுத்தவது போல அக்கால புறமதத் தெய்வங்களோடு சம்பந்தப்பட்ட பாடல்கள் இல்லை. புறமதப் பாடல்களில் தெய்வங்களிற்கிடையிலான காதலும், பொறாமையும், ஒழுக்கவீனங்களும் இருப்பது போல உன்னதப்பாட்டு எழுதப்படாமல், ஒருவன் ஒருத்தியை மட்டும் நேசிக்கும் உண்மை அன்பே உன்னதப்பாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
(A.Hwang & S.Goh, Song of Songs: Asia Bible Commentary, pp. 27-28.

(15) Cited in F.Delitzsch, Song of Songs, pp. 162-176.

(16) R.Murphy & E.Huwiler, Proverbs, Ecclesiastes, Song of Songs: New International Biblical Commentary, 237.

(17) R.Gordis, The Song of Songs and Lamentations, p. 19.

(18) LaSor, Hubbard, Bush, Old Testament, p. 608.

(19) M.H.Pope, Song of Songs: The Anchor Bible Commentary, p. 228.

(20) Ibid. pp. 211-222.

(21) Ibid. p. 222.

(22) மார்பகங்களே நாம் உபயோகிக்கும் தமிழ் வேதாகமத்தில் “ஸ்தனங்கள்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளன.

(23) யூத மதப் போதகர்கள் இங்கு யூத ராட்சியத்தைக் குறிப்பிட தாவீதின் பெயரையும், வட ராட்சியமான இஸ்ரவேலைக் குறிப்பிட எப்பிராயீமின் பெயரையும் உபயோகித்துள்ளனர். இஸ்ரவேல் ராட்சியம் கி.மு.930ல் இரண்டாகப் பிரிவடைந்தது. இஸ்ரவேலின் தென் ராட்சியத்தில் யூதா கோத்திரமே பெரிய தாக இருந்தமையாலும், நாட்டின் அரசன் அக்கோத்திரத்தைச் சேர்ந்தவனாக இருந்தமையாலும் (1ராஜா. 12:22-24), இது ‘யூதா ராட்சியம்’’ என்று அழைக்கப்படலாயிற்று. வட ராட்சியம் பொதுவாக இஸ்ரவேல் என்றே அறியப்பட்டடிருந்தாலும் சில சந்தர்ப்பங்களில் எப்பிராயீம் என்றும் அழைக்கப்பட்டது. வடராட்சியத்தின் முதல் அரசன் எப்பிராயீம் கோத்திரத்தைச் சேர்ந்தவனாக இருந்தமையாலும் (1ராஜா.11:26) இக்கோத்திரம் அதிக பலமிக்கதாய் இருந்தமையாலும் இப்பெயர் சில சந்தர்ப்பங்களில் வடராட்சியத்திற்கு உபயோகிக்கப்பட்டது.(C.H.Dyer, Ezekiel: The Bible Knowledge Commentary Old Testament, p. 1299).
கி.மு.722ல் வடராட்சியம் அசீரியர்களினால் ஆக்கிரமிக்கப்பட்ட பின்னர் தென் ராட்சியமும் சில சந்தர்ப்பங்களில் இஸ்ரவேல் என்று அழைக்கப்பட்டது (J.B.Taylor, Ezekiel: Tyndale Old Testament Commentaries, p. 240).

(24) Cited in D.F.Kinlaw, Song of Songs: The Expositor’s Bible Commentary Volume 5, p. 1203.
யூதமதப்போதகரான Ibn Ezra உன்னதப்பாட்டு 7:2ஐ வியாக்கியானம் செய்யும் பொது, பெண்ணின் ‘தொப்புழ்’’ (நாம் உபயோகிக்கும் தமிழ் வேதாகமத்தில் இதை ‘நாபி’ என்று குறிப்பிட்டுள்ளனர்) ‘யூதர்களுடைய பெரிய ஆலோசனைச் சங்கம்’ என்றும், அதில் நிறைந்திருக்கும் திராட்சை ரசம் “நியாயப்பிரமாணம்’ என்றும், ‘கோதுமை அம்பாரம் போன்ற வயிறு’’ சிறிய ஆலோசனைச் சங்கம் என்றும் குறிப்பிட்டுள்ளார் Cited in H.H.Rowley, “Interpretation of the Song of Songs” in The Servant of the Lord and Other Essays, p. 193). 25 Ibid. p. 1203.

25 Ibid. p. 1203.

(26) W.Nee, Song of Songs, p. 77.


(இவ்வாக்கமானது Dr. M.S. வசந்தகுமார் அவர்கள் எழுதிய “உன்னதப்பாட்டின் உண்மைகள்“ எனும் நூலிலிருந்து பெறப்பட்டதாகும்)



__________________
மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது. (Ps 42:1)



இளையவர்

Status: Offline
Posts: 21
Date:
RE: உண்மைக் காதலின் உன்னதக் காவியம்(உன்னதப்பாட்டின் உண்மைகள்)
Permalink  
 


உன்னதப்பாட்டிற்கு கிறிஸ்தவர்கள் மத்தியில் இருக்கும் மறைபொருள் அர்த்த விளக்கத்தின் பொதுவான அம்சங்களாக பின்வரும் வியாக்கியானங்கள் உள்ளன. 1:2ன் ‘வாயின் முத்தங்கள்’’ தேவனுடைய வார்த்தையையும், 1:5ல் ‘பெண்ணின் கறுப்பு நிறம்’ பாவத்தையும், 7:7ன் ‘ஸ்தனங்கள்’’ விசுவாசியைப் போஷிக்கும் சபையின் உபதேசத்தையும், 4:11ன் ‘உதடுகள்’’ நியாயப்பிரமாணத்தையும்
சுவிசேஷத்தையும், 6:11ன் ‘கொடிகள் பறக்கும் படை’’ சபை சாத்தானுக்கு எதிராகப் போரிட ஆயத்தமாக இருப்பதையும் உருவகிப்பதாகக் கருதப்படுகின்றது
.(27) சிலர், 2:12ல் ‘காட்டுப் புறாவின் சத்தம்’ அப்போஸ்தலர்களின் பிரசங்கத்தையும், 5:1ன் விவரணம் திருவிருந்தையும் குறிப்பதாக விளக்கியுள்ளனர். (28) இவ்வசனத்தில் “நான் என் தோட்டத்தில் வந்தேன்’’ என்னும் வாக்கியத்தைச் சிலர் இயேசுகிறிஸ்து மனிதராக இவ்வுலகத்திற்கு வந்ததைப் பற்றிய விவரணமாகக் கருதுகின்றனர். (29) உன்னதப் பாட்டு 7:2ல் ‘திராட்சைரசம் நிறைந்த தொப்புழ்’’ ஞானஸ்நானத் தொட்டியையும், திருவிருந்தின் ரசத்தையும் குறிப்பதாகவும் சிலர் விளக்கியுள்ளனர். (30) ஆனால், இவ்விளக்கங்கள் சகல கிறிஸ்தவர்களினாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்று கூறுவதற்கில்லை. (31) உன்னதப்பாட்டின் ஒவ்வொரு வசனத்திற்கும் கிறிஸ்தவர்கள் தங்களுக்கு விருப்பமான விதத்தில் புதுப்புது வித்தியாசமான அர்ததங்களைக் கொடுத்து வருவதனால் இன்று பெரும்பாலான வேதஆராய்சசியாளர்கள், மறைபொருள் அர்த்த விளக்கமுறையின் படியான வியாக்கியானம் உன்னதப்பாட்டிற்கு பொருத்தமற்றது என்பதையும், இது, உன்னதப்பாட்டின் செய்தியைத் தாறுமாறாக்கும் பிழையான வியாக்கியான முறை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.(32) உன்னதப்பாட்டு புத்தகத்தை மறைபொருள் அர்த்த விளக்க முறையின்படி வியாக்கியானம் செய்பவர்கள், இதுவே புத்தகத்தை விளக்கும் சரியான முறை என்றும், நாம் இவ்விதமாக புத்தகத்தை வியாக்கியானம் செய்ய வேண்டும் என்பதே தேவனுடைய நோக்கம் என்றும் கூறுவதோடு, புத்தகத்தின் மறைபொருளான ஆவிக்குரிய அர்த்தத்தைக் கண்டுகொள்ளமுடியாத வியாக்கியானங்கள் மாம்சப்பிரகாரமானது என்று கருதுகின்றனர். (33) ‘வேதாகமகால உருவகங்களையும், ஆவிக்குரிய மறைபொருட்களையும் அறியமுடியாததினாலேயே மறைபொருள் அர்த்தவிளக்கம் நிராகரிக்கப்படுகின்றது’’ (34) என்னும் குற்றச்சாட்டு தற்கால வேத ஆராய்ச்சியாளர்கள்மீது சுமத்தப்பட்டாலும், உன்னதப்பாட்டின் வசனங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள மறைபொருள் அர்த்தவிளக்கங்கள் ஒன்றுக்கொன்று முரணானவைகளாகவும், புத்தகத்தின் செய்தியைத் தாறுமாறாக்குபவைகளாகவுமே உள்ளன. உன்மையில் வேதாகமத்தில் மறைபொருள் அர்ததம் கொண்ட பகுதிகள் இருப்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், இவற்றின் அர்த்தம் மானிடக் கற்பனையாலும் ஊகத்தினாலும் உருவாக்கப்படும் வித்தியாசமான விளக்கங்களைக் கொண்டிராமல், ஒவ்வொன்றினதும் அர்ததமும் என்ன என்பதை அறிந்து கொள்ளக்கூடிய விதத்தில் விளக்கங்களுடன் எழுதப்பட்டிருப்பதை நாம் அவதானிக்கலாம். உதாரணத்திற்கு இயேசுகிறிஸ்துவின் போதனைகளில் ‘விதைப்பவனின் உவமை’’ மறைபொருள் அர்ததம் கொண்ட ஒரு கதையாகும். ஆனால், இவ்வுவமையில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஒவ்வொன்றும் எதைக் குறிக்கின்றது என்பதை நாம் அறிந்து கொள்வதற்காக, இயேசுகிறிஸ்துவே உவமையில் குறிப்பிடப்படும் ஒவ்வொன்றும் எதனைக் குறிக்கின்றது என்று விளக்கம் கொடுத்துள்ளார். (35) ஆனால் உன்னதப்பாட்டில் இத்தகைய விளக்கங்கள் எதுவும் கொடுக்கப்படவில்லை. இதனால், நமது கற்பனையில் அல்லது ஊகத்தில் உன்னதப்பாட்டின் வசனங்களுக்கு புதுப்புது அர்ததங்களைக் கொடுக்க முடியாது. வேதாகமத்தில் தேவனுக்கும் மக்களுக்கும் இடையிலான உறவைக் குறிக்கும் அடையாளங்களாக உள்ள சம்பவங்களில் மறைபொருள் அர்ததம் இருப்பது பற்றி றிப்பிடப்பட்டுள்ளதை எசேக்கியேல் 16:3, ஓசியா 1-3 போன்ற பகுதிகளில் நாம் அவதானிக்கலாம். ஆனால் இத்தகைய குறிப்புகள் உன்னதப்பாட்டில் இல்லை. வேதாகமத்தின் வேறு பகுதிகளில் தேவனுக்கும் இஸ்ரவேலருக்கும் இடையிலான உறவு கணவன் மனைவி உறவு முறையின் மூலம் சித்தரிக்கப்பட்டிருக்கின்றது என்பதற்காக உன்னதப்பாட்டும் இவ்வித உருவக விவரணமாகவே உள்ளது என்று கூறுவது அர்த்தமற்ற தர்க்கமாகும். எனவே, உன்னதப்பாட்டை மறைபொருட்கள் கொணட் விவரணமாக்க கருதமுடியாது. (36) மேலும், உன்னதப்பாட்டு இத்தகைய முறையில் வியாக்கியானம் செய்யப்பட வேண்டும் என்பதற்கு புதிய ஏற்பாட்டிலும் எவ்வித ஆதாரங்களும் இல்லை. (37) இயேசுகிறிஸ்துவோ, அப்போஸ்தலர்களோ உன்னதப்பாட்டை மறைபொருட்கள் கொண்ட கதையாக விளக்குவதற்கு எவ்வித ஆதாரக் குறிப்பையும் தரவில்லை. (38)

உண்மையில், உன்னதப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள உரையாடல்கள் தேவனும் மனிதரும் பேசுவதான உரையாடல்களாக இல்லை. தேவனும் மனிதனும் காதல் வசப்பட்ட ஒரு ஆணும் பெண்ணும் பேசுவது போல பேசுவதும், சரிர அவயவங்களை பாலியல் உணர்வுடன் வர்ணித்து மகிழ்வதும், தேவனுக்கும் மனிதனுக்கும் இடையிலான புனித உறவைக் களங்கப்படுத்தும் செயல்களாகும்.’’(39) உன்னதப்பாட்டின் முதல் வரியே, அதாவது, ‘அவர் தமது வாயின் முத்தங்களினால் என்னை முத்தமிடுவாராக’’ என்னும் கூற்றே (உன்.1:2) இது தேவனுக்கும் மனிதருக்கும் இடையிலான உறவைப் பற்றிய பாடல் அல்ல என்பதை அறியத்தருகின்றது. (40) அதேபோல, உன்னதப்பாட்டில் ஆணும் பெண்னும் ஒருவரது அழகை மற்றவர் வர்ணிககும் முறை தேவனுககும் மனிதனுக்கும் இடையிலான உரையாடலுக்கு எவ்விதத்திலும் பொருத்தமற்றவையாகவே உள்ளன. (41) உண்மையில், பெண்ணின் அழகை வர்ணிக்கும் பகுதிகளை இயேசு கிறிஸ்து சபையைப் பார்த்து கூறுகிறார் என்பது அர்த்தமற்ற விளக்கமாகவே உள்ளது. (42) மானிடக் காதல் மொழிகள் தேவனுடனான உறவிற்குப் பொருத்தமற்றவை என்பதை நாம் மறக்கலாகாது. பாலியல் உணர்வுகளைத் தூண்டும் விதத்தில், மதுபோதையில் ஆண்களும் பெண்களும் ஆடிப் பாடி தெய்வத்தை வழிபடும் முறைகள் புராதன கால மதச் சடங்காச்சாரங்களிலேயே உள்ளன.(43) ஆனால், வேதாகமத்தில் தம்மை வெளிப்படுத்தியுள்ள தேவனை இவ்வாறு வழிபடமுடியாது. (44) இதனால், மானிடக் காதல் மொழிகளை உள்ளடக்கிய உன்னதப்பாட்டை தெய்வத்திற்கும் மனிதனுக்கும் இடையிலான உறவைப் பற்றிய பாடலாக விளக்கமுடியாது. ‘சபையைக் கிறிஸ்துவின் மணவாட்டியாக வேதாகமம் உவமித்தாலும், இவ்வுறவை சரீர அழகைப் புகழும் வர்ணனைகளினாலும், பாலியலோடு சம்பந்தப்பட்ட வார்த்தைகளினாலும் வேதாகமம் சித்தரிக்கவில்லை’’ (45) என்பதை நாம் மறக்கலாகாது.

கிறிஸ்தவ இலக்கியங்களில் ‘ஜோன் பனியன்’’ எழுதிய “மோட்சப் பிரயாணம்’’ மறைபொருட்கள் கொண்ட ஒரு காவியமாக உள்ளது. இதனால்தான், இக்கதையில் வரும் நபர்களுக்கும் இடங்களுக்கும் சிறப்பான அர்த்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் உன்னதப்பாட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் இடங்களுக்கும் நபர்களுக்கும் சிறப்பான அர்த்தங்கள் பாடலில் கொடுக்கப்படவில்லை. இவை சொல்லர்த்தமாகவே குறிப்பிடப்பட்டுள்ளமையால், மறைபொருள் அர்த்தங்கள் கொண்ட கதைகளில் வரும் கற்பனைக் கதாபாத்திரங்களைப் போல அவற்றிற்கு நம்மால் அர்த்தங்களைக் கொடுக்க முடியாது. (46) உன்னதப்பாட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் இடங்கள் அனைத்தும் பலஸ்தீனாவில் உள்ள பூகோளரிதியான உண்மையான பிரதேசங்களாக இருப்பதனால், இதை எவ்விதத்திலும் மறைபொருட்கள் கொண்ட காவியமாகக் கருதமுடியாது.(47)

யூதர்களும் கிறிஸ்தவர்களும் நீண்டகாலமாக உன்னதப்பாட்டை மறைபொருட்கள் கொண்ட பாடலாகவே வியாக்கியானம் செய்து வந்துள்ளமையால் நாமும் அவ்விதமாகவே இப்புத்தகத்தை விளங்கிக்கொள்ளவேண்டும் என்று கருதுவது தவறாகும். கி.பி.16ம் நூற்றாண்டில் சபை சீர்திருத்தப்படும் வரை ரோம சபையில் இருந்த உபதேசங்களில் பலவற்றை இன்று ரோமன் கத்தோலிக்க சபை தவிர்ந்த ஏனைய சபைகள் சரியானவை என்று ஏற்றுக்கொள்வதில்லை. அவற்றைப் பல கிறிஸ்தவ சபைகள் பிழையானவையாகவே கருதுகின்றன. உண்மையில் வேதப் பகுதிகளை மறைபொருள் அர்த்தம் கொண்ட கதைகளாக வியாக்கியானம் செய்வதும் அக்கால ரோம சபையில் இருந்த தவறான ஒரு முறையாகவே உள்ளது. ஏனென்றால் இது கிரேக்கர்கள் தங்களது புராணங்களை வியாக்கியானம் செய்த முறையாகும், உண்மையில், “இது புராணத் தெய்வங்களினதும், சரித்திர புருஷர்களினதும் ஒழுக்கக் கேடான பாலியல் வாழ்வைச் சித்தரிக்கும் பகுதிகளை, அறிவியல் ரிதியாக சிந்திக்கும் மக்கள் அருவருப்பாக எண்ணாமல் இருப்பதற்காக உருவாக்கப்பட்ட வியாக்கியான முறையாகும்.’’ (48) முதலாம் நூற்றாண்டு யூதர்களும், பிற்கால கிறிஸ்தவர்களும் கிரேக்கர்களது வியாக்கியான முறையின் செல்வாக்கிற்கு உட்பட்டவர்களாகவே வேதாகமத்தை மறைபொருட்கள் கொண்ட கதைகளாக விளக்கத் தொடங்கினர்.(49) இது யூத மற்றும் கிறிஸ்தவர்கள் மத்தியில் ஆரம்பத்திலிருந்து இருந்த வேத வியாக்கியான முறை அல்ல. இயேசுகிறிஸ்துவோ அப்போஸ்தலர்களோ வேதாகமத்தை (பழைய ஏற்பாட்டை) இவ்வாறு வியாக்கியானம் செய்யவில்லை.

ஆரம்பத்தில் யூதர்களும் கிறிஸ்தவர்களும் உன்னதப்பாட்டை காதல் பாடலாகவே வியாக்கியானம் செய்து வந்தனர்.(50)

(வளரும்)




Footnote References


(27) Cited in D.A.Garrett, Proverbs, Ecclesiastes, Song of Songs: The New American Commentary, p. 353.

(28) Cited in J.S.Deere, Song of Songs: The Bible Knowledge Commentary Old Testament, p. 1009.

(29) Cited in R.W.Orr, Song of Songs: New International Bible Commentary, p. 703.

(30) Cited in G.L.Carr, The Song of Solomon: Tyndale Old Testament Commentaries, p. 26.


(31) 16ம் நூற்றாண்டின் சபைச் சீர்திருத்தவாதி மாட்டின் லூத்தர், அதுவரை காலமும் சபையில் இருந்து வந்த மறைபொருள் அர்த்தவிளக்க முறையை ஏற்றுக்கொள்ளாத போதிலும், உன்னதப்பாட்டை வியாக்கியானம் செய்யும் போது, தனது காலத்தின் நிலயை அடிப்படையாகக் கொண்டு, 1:2ன் ‘வாயின் முத்தம்’’ தேவனுடைய வாhத்தை என்றும், 1:5ன் “கறுப்பு நிறம்’’ பாவம் என்றும், 2:11ன் ‘மாரிகாலம்’’ பிழையான போதனைகள் என்றும் குறிப்பிட்டுள்ளார் (Luther’s Works Volume 15, pp. 196-264).
உன்னதப்பாட்டின் மணப்பெண்ணை லூத்தர் அரசாங்கத்தை உருவகிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்
G.W.Bromiley, ed., The International Standard Bible Encyclopedia Volume One, p. 606). அக்காலத்தைய இன்னுமொரு சீர்திருத்தவாதியான ஜோன் கல்வின் உன்னதப்பாட்டு புத்தகத்திற்கு விளக்கவுரை எழுதாவிட்டாலும், தனது உபதேசப் புத்தகத்தில் உன்னதப்பாட்டு 5:3ல் குறிப்பிடப்பட்டுள்ள “என் பாதங்களைக் கழுவினேன். நான் எப்படி அவைகளைத் திரும்பவும் அழுக்காக்குவேன்’’ என்னும் கூற்றை, மனந்திரும்பிய ஆத்துமாவின் வார்த்தைகளாக விளக்கியுள்ளார். (Calvin’s Institute, III 16:4).

(32) S.C.Glickman, A Song for Lovers, p. 175.

(33) P.P.Parente, “The Canticle of Canticles in Mystical Theology” in Catholic Biblical Quarterly. 6 (1944), p. 150.

(34) The Works of John Flavel Volume 6, p. 450.

(35) இயேசுகிறிஸ்து சில உவமைகளுக்கு மறைபொருள் அர்த்தவிளக்க முறையின்படி விளக்கங்கள் கொடுத்துள்ளமையால், அவரது உவமைகள் எல்லாம் இவ்விதமாகவே வியாக்கியானம் செய்யப்பட வேண்டும் என்று கருதி, அவர் விளக்கம் கொடுக்காத உவமைகளுக்ககெல்லாம் நாம் நமது கற்பனை யில் அர்த்தம் கற்பிக்கக்கூடாது. எனினும், அண்மைக்காலம் வரை, இயேசுகிறிஸ்துவின் உவமைகள் அனைத்தும் மறைபொருட்களைக் கொண்ட கதைகளாகவே கிறிஸ்தவர்களால் வியாக்கியானம் செய்யப்பட்டு வந்துள்ளன. இதற்குக் காரணம், விதைப்பவனுடைய உவமையை இயேசுகிறிஸ்து விளக்கிய முறையும், மத்தேயு 13:10-13, மாற்கு 4:10-12, லூக்கா 8:9-10 போன்ற வசனங்களில் இயேசுகிறிஸ்து குறிப்பிட்டவைகளுமாகும். ஆனால், லூக்கா 15:3, 19:11 போன்ற வசனங்கள், இயேசுகிறிஸ்து மறை பொருட்களையே உவமைகளாகச் சொன்னார் என்னும் கருத்தை முரண்படுத்துகின்றது. மேலும், மத்தேயு 21:45, லூக்கா 10:25-37 போன்ற வசனங்கள், இயேசுகிறிஸ்து சொல்லிய உவமைகளை மக்கள் விளங்கிக் கொண்டதை அறியத்தருகின்றன. மத்தேயு 13:10-13, மாற்கு 4:10-12, லூக்கா 8:9-10 போன்ற வசனங்களில் இயேசுகிறிஸ்து சொல்வதை சரியானவிதத்தில் விளங்கிக் கொள்வதற்கு, ‘உவமை’’ என்னும் பதத்தை அவர் என்ன அர்த்தத்தோடு உபயோகித்துள்ளார் என்பதை நாம் முதலில் அறிந்து கொள்ள வேண்டும். உண்மையில், ‘பரபோலி’’ (parabole) என்னும் கிரேக்க பதமே இவ்வசனங்களில் உவமை என்று தமிழில் மொழிபெயர்ககப்பட்டுள்ள போதிலும், இயேசுகிறிஸ்து அரமிக் மொழியிலேயே பேசினார் என்பதை நாம் மறக்கலாகாது. இயேசுகிறிஸ்துவின் கூற்றில் அரமிக்மொழியில் உபயோகிக்கப்பட்டுள்ள “மெத்ஹலா’’ (mathla) என்னும் பதம் பலவிதமான அர்த்தங்களைக் கொண்டுள்ளது. பழமொழி, ; மரபுத்தொடர், உருவகவிவரணம், ஒப்புவமை, உவமை, மறைபொருட்கதை, விடுகதை, புதிர் போன்றவை அனைத்தையும் குறிப்பிட இப்பதமே உபயோகிக்கப்பட்டது. ஆனால் இப்பதம் கிரேக்கத்தில் “பரபோலி’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளமையால், அரமிக் மொழிச்சொல்லால் குறிப்பிடப்படும் அனைத்தையும் உவமை என்று கருதி, கிறிஸ்வத சபை சகல உவமைகளையும் ஒரேவிதமாக, அதாவது மறைபொருள் கதைகளாகவே வியாக்கியானம் செய்து வந்துள்ளது. (D.Wenham, The Parables of Jesus, pp. 225-245) உவமை என்பதற்கு இயேசுகிறிஸ்து உபயோகித்த அரமிக் மொழிப் பதம், பலதரப்பட்ட உருவகவிவரணங்களைக் குறிப்பிதனால், இயேசுகிறிஸ்துவின் உவமைகளாக வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டிருப்பவை அனைத்தையும் மறைபொருட்கதைகளாகக் கருதுவது தவறாகும்.

(36) S.C.Glickman, A Song for Lovers, p. 175. உன்னதப்பாட்டைப் போன்ற காதல் பாடல்கள் தேவனுக்கும் மக்களுக்கும் இடையிலான உறவை வர்ணிக்கும் பாடல்களாக வியாக்கியானம் செய்யப்படவேண்டும் என்பதற்கு ஏசாயா 5:1-7 இருப்பதாக சிலர் வாதிடுகின்றனர் (F.Landy, "The Song of Songs and the Garden of Eden" in Journal of Biblical Literature, pp. 513-528; B.G.Webb, Five Festal Garments, p. 28).ஆனால், ஏசாயா 5:1-7ஐக் காதல் பாடலாக வியாக்கியானம் செய்யமுடியாது. 1ம் வசனத்தில் இது தன் நேசருக்கான பாடல் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 7ம் வசனத்தின்படி நேசர் கர்த்தர் என்பது தெளிவா கின்றது. எனினும், நேசருக்காகப் பாடும்பாடல் பெண் பாடும் பாடலாக இல்லை. ‘மூலமொழியில் பாடலைப் பாடுபவர் ஆண்பாலில் குறிப்பிடப்பட்டுள்ளமையால், இதை நேசருக்கான பாடல் என்றல்ல, நண்பனுக்கான பாடல் என்றே மொழிபெயர்கக வேண்டும்’’ (J.D.W.Watts, Isaiah 1-33: Word Biblical ; Commentary Volume 24, p. 53). உண்மையில் இது மணவாளனின் தோழன் பாடும் பாடலாகவே உள்ளது. அதுவும், இது மணமகளின் நிலை குறித்து மணவாளனின் தோழன் மணவாளனிடம் முறையிடும் பாடலாகவே உள்ளது. இதனால், இது காதல் பாடலாக அல்ல ‘ஒரு புலம்பலாகவே உள்ளது’’ (J.Goldingay, Isaiah: New International Biblical Commentary, p. 52). எனவே உன்னதப்பாட்டை தேவனுக்கும் இஸ்ரவேலுக்கும் இடையிலான உறவைச் சித்தரிக்கும் காதல் பாடலாக வியாக்கியானம் செய்வதற்கு ஏசாயாவின் பாடல் ஆதாரமாய் இருப்பதாகக் கூறமுடியாது. மேலும், ஏசாயாவின் பாடலில் 7ம் வசனத்தில் திராட்சைத் தோட்டம் இஸ்ரவேல் என்பது தெளிவாகவும் நேரடியாகவும் குறிப்பிடப் பட்டுள்ளது. ஆனால், உன்னதப்பாட்டில் மணப்பெண்ணை (அல்லது காதலியை) இஸ்ரவேலாக வியாக்கியானம் செய்வதற்கு எவ்வித ஆதாரக் குறிப்புகளும் இல்லை. வேதத்தின் ஒரு பகுதியில் உருவக விவரணம் இருக்கின்றது என்பதற்காக, இத்தகைய விவரணமே வேதாகமத்தின் சகல பகுதிகளிலும் இருக்கின்றது என்று கூறுவது அhத்தமற்றது. வேதாகமத்தின் சில பகுதிகளில் இஸரவேலுக்கும் தேவனுக்கும் இடையிலான உறவு மணமகனுக்கும் மணமகளுக்கும் இடையிலான உற வாகச் சித்தரிக்கப்பட்டிருப்பதனால், உன்னதப்பாட்டிலும் இவ்விதமாக விவரணமே இருக்கின்றது என்று கூறமுடியாது.

(37) D.A.Garrett, Proverbs, Ecclesiastes, Song of Songs: The New American Commentary, p. 355.

(38) பழைய ஏற்பாடானது புதிய ஏற்பாட்டின் அடிப்படையிலேயே வியாக்கியானம் செய்யப்படவேண்டும். அதாவது, புதிய ஏற்பாட்டில் கொடுக்கப்பட்டுள்ள முமுமையான வெளிப்படுத்தல், பழைய ஏற்பாட்டின் பகுதியளவிலான வெளிப்படுத்தலை விளங்கிக்கொள்ள உதவுகின்றது. உண்மையில் பழைய ஏற்பாட்டை எவ்வாறு வியாக்கியானம் செய்வது என்பதற்குப் புதிய ஏற்பாட்டில் பலதரப்பட்ட விளக்கங்கள் நேரடியாகவும், உதாரணங்களுடனும் உள்ளன (R.B.Zuck, Basic Bible Interpretation, pp. 250-278). ஆனால், உன்னதப்பாட்டை மறைபொருட்கள் கொண்ட கதையாக வியாக்கியானம் செய்ய வேண்டும் என்று புதிய ஏற்பாடு போதிக்கவில்லை. ஆனால், பவுல் கலாத்தியர் 4:21-31ல் பழைய ஏற்பாட்டுச் சரிதையின் ஒரு பகுதியை மறைபொருட்கள் உள்ள கதையாக விளக்கியுள்ளதை இன்று பலர் மறைபொருள் அhத்த விளக்கத்தை நியாயப்படுத்தவதற்காக உபயோகித்து வருகின்றனர். உண்மையில் பவுல் இங்கு, ஆபிரகாமின் வாழ்வைப் பற்றி குறிப்பிடும் போது, “இவை ஞானஅர்த்தமுள்ளவைகள்’’ (கலா.4:24) என்னும் அறிமுகத்துடன் அவரது இரு மனைவிகளையும் இரு உடன்படிக்கைகளாகவும், அவர்களில் ஒருத்தியை சீனாய் மலையாகவும், மற்றவளை பரம எருசலேமாகவும் சித்தரித்தள்ளார் (கலா.4:24-25). எனினும், 24ம் வசனத்தில் “இவை ஞானஅர்த்தமுள்ளவைகள்’’ என்னும் சொற்பிரயோகம், மூலமொழி யின் இலக்கண அமைப்பு முறையின்படி “இவை ஞானஅர்த்தமுள்ளவைகளாக விளக்கப்படுகின்றன’’ என்று மொழிபெயர்க்கப்படவேண்டும் (R.N.Longenecker, Galatians: Word Biblical Commentary Volume 41, p. 210) உண்மையில், பவுல் ஆவிரகாமின் வாழ்வை மறைபொருட்கள் கொண்ட கதையாக விளக்க வில்லை. ஆனால், கலாத்திய சபையினரைக் குழப்பிய வேதப் புரட்டர்கள் தங்களது உபசேத்திற்கு ஆதாரம் காட்டுவதற்காக அக்காலத்தில் பிரபலமாயிருந்த மறைபொருள் அர்த்தவிளக்கத்தின்படி ஆபிரகாமின் வாழ்வுச் சரிதையை வியாக்கியானம் செய்து வந்தனர். இதை 24ம் வசனத்தில் கலாத்தியருக்கு சுட்டிக்காட்டும் பவுல், அதனைத் தொடர்நது வரும் வசனங்களில், வேதப்பரட்டர்களின் வியாக்கியானத்தைத் திருத்துவதோடு, வேதப்புரட்டர்களின் வியாக்கியான முறையின்படியே அவர்களுக்கு பதில் கொடுத்துள்ளார் (L.Morris, Galatians: Paul's Charter of Christian Freedom, p. 146). எனவே இங்கு பவுல் பழைய ஏற்பாட்டு சரித்திரத்தை மறைபொருட்கள் கொண்ட கதையாக வியாக்கியானம் செய்யவில்லை. மாறாக, மறைபொருட்கள் கொண்ட வேதப்புரட்டர்களின் தவறான விளக்கத்தைத் திருத்தியுள்ளார்.

(39) D.A.Garrett, Proverbs, Ecclesiastes, Song of Songs: The New American Commentary, p. 357.

(40) Ibid. p. 357.

(41) R.Davidson, Ecclesiastes and Song of Solomon: The Daily Study Bible, p. 95 உதாரணத்திற்கு தேவன் மனிதனைப் பார்த்து “ராஜகுமாரத்தியே, பாதரட்சைகளிட்ட உன் பாதங்கள் மிகவும் அழகாயிருக்கிறது. உன் இடுப்பின் வடிவு விசித்திர தொழிற்காரரின் வேலையாகிய புஷணம் போலிருக்கிறது. உன் நாபி திராட்சை ரசம் நிறைந்த வட்டக் கலசம் போலிருக்கிறது. உன் வயிறு லீலி புஷ்பங்கள் சூழ்ந்த கோதுமை அம்பாரம் போலிருக்கிறது. உன் இரண்டு ஸ்தனங்களும் வெளிமான் இரட்டைக் குட்டிகளுக் குச் சமானமாயிருக்கிறது’’ (உன்.7:1-3) என்று கூறுவதும், மனிதன் தேவனிடம் “என் நேசர் வெண்மையும் சிவப்புமானவர். புதினாயிரம் பேர்களில் சிறந்தவர். அவர் தலை தங்கமயமாயிருக்கிறது. அவர் தலை மயிர் சுருள் சுருளாயும், காகத்தைப் போல் கருமையாயுமிருக்கிறது’’ (உன்.5:10-11) என்று பேசுவதும் எவ்விதத்திலும் பொருத்தமற்றதாகவே உள்ளது. தேவனுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான உரையாடல் இத்தகைய மொழிநடையில் இருப்பதாக வேதாகமத்தில் எங்கும் குறிப்பிடப்படவில்லை.

(42) C.D.Ginsburg, The Song of Songs, p. 181. . உன்னதப்பாட்டு, 7:6-9ல் “மனமகிழ்சசியை உண்டாக்கும் என் ; பிரியமே, நீ எவ்வளவு ரூபவதி, நீ எவ்வளவு இன்பமுள்ளவள். உன் உயரம் பனைமரத்தொழுங்கு போலவும், உன் ஸ்தனங்கள் திராட்சைக் குலைகள் போலவும் இருக்கிறது. நான் பனை மரத்திலேறி, அதின் மடல்களைப் பிடிப்பேன்’’ என்று இயேசுகிறிஸ்துவினால் சபையைப் பார்தது கூறமுடியுமா? ; அதேபோல உன்னதப்பாட்டு 4:1-5, 7:2-9 போன்ற பகுதிகளையும் சபையைப் பாhத்து இயேசுகிறிஸ்துவினால் கூறமுடியாது.

(43) M.H.Pope, The Song of Songs: Anchor Bible Commentary, pp. 158-179.

(44) தேவனைப் பாலியல் வார்த்தைகளினால் அல்ல அவரை ஆவியோடும் உண்மையோடும் தொழுது கொள்ள வேண்டும் என்றே வேதாகமம் அறிவுறுத்தியுள்ளது. தேவனை ஆவியோடும் உண்மையோடும் தொழுது கொள்வதைப் பற்றிய விபரங்களுக்கு எனது “ஆத்தும தாகத்திற்கு அற்புதத் தண்ணீர்’ ; என்னும் நூலின் 71 முதல் 89 வரையிலான பக்கங்களைப் பார்ககவும்.

(45) D.A.Garrett, Proverbs, Ecclesiastes, Song of Songs: The New American Commentary, p. 355..

(46) D.F.Kinlaw, Song of Songs: The Expositor’s Bible Commentary Volume 5, p. 1203.


(47) G.L.Carr, The Song of Solomon: Tyndale Old Testament Commentaries, p. 23.

(48) D.A.Garrett, Proverbs, Ecclesiastes, Song of Songs: The New American Commentary, p. 355.. கிரேக்கர்கள் மத்தியில் தத்துவ போதனைகள் அதிகரித்த காலகட்டத்தில், மார்க்க நூல்களில் உள்ள தெய்வங்களைப் பற்றிய கதைகள் அவர்களுக்கு அறிவீனமானவைகளாகத் தென்பட்டமையால், மக்கள் மத்தியில் அவற்றிற்கு இருந்த மதிப்பு குறைவடையத் தொடங்கியது. இதனால் அவர்கள் தங்கள் மார்க்க நூல்களில் சொல்லப்பட்டவைகளுக்கு மறைமுக அர்த்தம் இருக்கின்றது என்று கூறி, அவற்றில் சொல்லர்த்தமாய் சொல்லப்பட்டவைகளுக்கும், புராணக் கதைகளுக்கும் வேறு அர்த்தங்களைக் கற்பிக்கத் தொடங்கினர். இத்தகைய விளக்கமுறை நாளடைவில் எகிப்திலுள்ள அலெக்சாந்திரியா பட்டணத்தில் வாழ்ந்த யூர்கள் மத்தியிலும் வேகமாகப் பரவத் தொடங்கியது. இதனால் அவர்கள் தங்களது மார்க்க நூலான பழைய ஏற்பாட்டையும் இவ்விதமாக வியாக்கியானம் செய்யத் தொடங்கினர்.

(49) கிரேக்கர்கள் மத்தியில் பிளேட்டோவின் தத்துவப் போதனைகள் பிரபலமடைந்த பின்னர், மானிட சரிரம் தீமையானது, ஆவியே தூய்மையானது என்னும் கருத்து உருவானது. இதனால், மானிட ஆவி தீமையான சரிரத்தில் சிறைப்பட்டிருக்கின்றது என்றும், ஆவியை இச்சிறையிலிருந்து விடுவிப்பதே மதங்களினதும் தத்துவப் போதனைகளினதும் தாற்பரியமாய் மாறியது. சிலர் சரிரப்பிரகாரமாக நாம் எப்படி வாழ்நதாலும், அது ஆவிக்குரிய வாழ்வைப் பாதிக்காது என்று கருதிய போதிலும், பெரும்பாலானவர்கள், சரிர ஆசைகளை ஒடுக்கிக் கட்டுப்படுத்தும் துறவறவாழ்வே மானிட ஆத்துமாவிற்கு விடுதலையைப் பெற்றுக் கொடுக்கும் என்று கருதினர். இதனால் திருமணம், பாலுறவு என்பன பாவமான செயல்களாகக் கருதப்பட்டது. ஆதிச்சபைப் பிதாக்களும் இத்தகைய தத்துவப் போதனைகளின் செல்வாக்கிற்கு உட்பட்டவர்களாக திருமண வாழ்வையும் பாலுறவையும் துறந்து வாழத் தொடங்கினர். இதனால் அவர்கள ; மானிடக் காதலையும் திருமண வாழ்வையும ; பற்றிய உன்னதப் பாடலை நேரடியாக, சொல்லாத்தமாக வியாக்கியானம் செய்யமுடியாதவர்களாக, அக்காலத்தில் கிரேக்கர்கள் மத்தியில் பிரபலமடைந்திருந்த மறைபொருள் அர்த்தவிளக்க முறையின்படி உன்னதப்பாட்டை வியாக்கியானம் செய்தனர் (M.H.Pope, Song of Songs: Anchor Bible Commentary, p. 115).

(50) D.A.Garrett, Proverbs, Ecclesiastes, Song of Songs: The New American Commentary, p. 365. கி.பி.முதலாம் நூற்றாண்டில் யூதமதப் போதகரான ரபி அக்கிபா உன்னதப்பாட்டை காதல் பாட்டாக பாட வேண்டாம் என்று கட்டளையிட்டதற்குக் காரணம், அதற்கு முற்பட்ட காலத்தில் யூதர்கள் இதைக் காதல் பாடலாகப் பாடிவந்தமையே ஆகும். மேலும், யூத வரலாற்றாசிரியர் ஜோசீப்பஸ் என்பாரும் உன்னதப்
பாட்டு காதல் பாடலாக இருப்பதாகவே குறிப்பிட்டுள்ளார். ஆரம்பகாலத்தில் அந்தியோகிய சபையைச் சேர்ந்தவர்களும் உன்னதப்பாட்டை இவ்விதமாகவே வியாக்கியானம் செய்தார்கள். ஆனால், பிற்காலத்தில் மறைபொருள ; அர்த்தவிளக்க முறை சபைக்குள் புகுந்தமையால,; கி.பி.553ல ; கொனஸ்தாந்திநோபிள் என்னும் இடத்தில் கூடிய சபையின் ஆலோசனைச் சங்கக் கூட்டத்தில், வேதாகமத்தை சொல்லர்த்தமாக வியாக்கியானம் செய்யும் அந்தியோகிய சபையின் வியாக்கியான முறையைத் தவறு என்று கூறினார்கள்
(G.Fohrer, Introduction to the Old Testament, p. 300).



__________________
மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது. (Ps 42:1)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard