பரிசுத்த வேதாகமத்தைக் குறை கூறுபவர்கள் எடுத்துக் கூறும் பகுதிகளில் யோசுவாவின் காலத்தில் நடந்ததாக வேதாகமத்தில் கூறப்படும் நீண்ட நாளும் ஒன்று. இதனைப்பற்றி யோசுவா 10:12 முதல் 14 வசனங்களில் காணலாம்.
யோசுவா 10:12-14 (கி.மு.1451)
"கர்த்தர் எமோரியரை இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக ஒப்புக் கொடுக்கிற அந்நாளிலே, யோசுவா கர்த்தரை நோக்கிப் பேசி, பின்பு இஸ்ரவேலின் கண்களுக்கு முன்பாக : சூரியனே, நீ கிபியோன் மேலும், சந்திரனே நீ ஆயலோன் பள்ளத்தாக்கிலும் மேலும், தரித்து நில்லுங்கள் என்றான். அப்பொழுது ஜனங்கள் தங்கள் சத்துருக்களுக்கு நீதியைச் சரிக்கட்டு மட்டும் சூரியன் தரித்தது, சந்திரனும் நின்றது; இது யாசேரின் புத்தகத்தில் எழுதியிருக்கவில்லையா? அப்படியே சூரியன் அஸ்தமிக்கத் தீவிரிக்காமல், ஏறக்குறைய ஒரு பகல் முழுவதும் நடுவானத்தில் நின்றது. இப்படிக் கர்த்தர் ஒரு மனிதன் சொல் கேட்ட அந்தநாளையொத்த நாள் அதற்கு முன்னுமில்லை அதற்குப் பின்னுமில்லை; கர்த்தர் இஸ்ரவேலுக்காக யுத்தம்பண்ணினார்."
மேற்கூறிய பாகத்தை வைத்து, சூரியன் நடு வனத்தில் நிற்குமா,சூரியன் பூமியை சுற்றுவதில்லையே, பூமி தானே சூரியனை சுற்றிக்கொண்டிருக்கின்றது: சூரியன் நடு வனத்தில் நிற்கும்போது சந்திரன் காணப்படுமா என்றெல்லாம் கேட்டு பரிசுத்த வேதாகமம் விஞ்ஞானத்திற்கு ஒவ்வாத கட்டுக் கதைகள் அல்லது பாட்டீ கதைகளடங்கிய புத்தகம் என்று ஆகடியம் பண்ணுவாருண்டு. சிலர், மோசே இறந்த பின் அவருடைய வேலையாளாகிய யோசுவா இவ்வளவு திரளான ஜனங்களை நடத்திச் செல்ல திறமையுள்ளவர்தான்; ஜேகோவா யோசுவாவோடும் இருக்கிறார் என்பதைக் காட்ட பிற்காலத்தில் யாரோ கட்டிய கதையை எழுதி வைத்துவிட்டார்கள் என்றும் கூறுவாருமுண்டு.
ஆனால் ஆபகூக் தீர்க்கதரிசி 825 ஆண்டுகளுக்குப் பின்பு (கி.மு.626ல்- ஆபகூக் 3:11 ஆம் வசனத்தில்) "சந்திரனும் சூரியனும் தன் தன் மண்டலத்தில் நின்றன" என்று கூறி இச்சம்பவத்தை ஊர்ஜிதம் செய்திருக்கிறார்.
உலகில் பல நாடுகளின் சரித்திரங்களில் அல்லது பாரம்பரிய கதைகளில் ஒரு காலத்தில் இப்படிப்பட்ட நீண்ட நாள் ஒன்று இருந்தது என்று கூறப்படுகிறது. உதரணமாக சீனாவில் அவர்களுடைய ஏடுகளில் இப்படிப்பட்ட நீண்ட நாள் ஒரு காலத்தில் ஏற்பட்டது என்பது காணப்படுகிறது. சீன ஏடுகளில் இயோ என்ற சக்கரவர்த்தி அரசாண்ட காலத்தில் இரண்டு பங்கு நீளமுள்ள நாள் ஒன்று இருந்தது என்று சரித்திரப் பூர்வமாகக் கூறப்பட்டிருக்கிறது. அதைப் போலவே தென் அமெரிக்காவில் பெரு என்னும் நாட்டில் வசிக்கும் இன்காஸ் என்ற ஜாதியாரின் பாரம்பரியத்திலும், மெக்சிக்கோவில் வசிக்கும் அஜ்டெக்ஸ் என்ற ஜாதியாரின் பாரம்பரியத்திலும், பாபிலோனிய பாரம்பரியத்திலும், பெர்சிய பாரம்பரியத்திலும் இந்த நிகழ்ச்சி இடம் பெற்றிருக்கிறது. ஹிரோட்டோஸ் என்ற சரித்திராசிரியர் எகிப்திய கோவில் பூஜாரிகள் தங்கள் ஏடுகளிலிருந்து இரண்டு பங்கு நீளமுள்ள ஒரு நாள் ஒரு காலத்தில் உண்டானதாக எழுதப்பட்டிருப்பதாகத் தனக்கு காட்டியதாக கூறி இருக்கிறார். இப்படியாக பல்வேறு நாடுகளிலும் இச்சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.
இதைப்பற்றி வேத ஆராச்சியளர்கள் கணித்துப் பார்க்கும்பொழுது கீழ்கண்ட காரியங்களை அறிந்தார்கள். அதாவது, கிபியோன் என்னப்பட்ட ஊர் பூமத்திய ரேகையிலிருந்து வடக்கே 31 டிகிரி 51 வினாடி (தோராயமாக 32 டிகிரி)யில் இருக்கிறது. ஆயலோன் பள்ளத்தாக்கு கிபியோனிலிருந்து 17 டிகிரி வடமேற்கேயுள்ளது. ஆகவே சூரியன் கிபியோனுக்கு நேர் உச்சியிலும் சந்திரன் ஆயலோன் பள்ளத்தாக்கிலும் இருக்கக்கூடுமானால் வான் சாஸ்திர கணக்குகளின்படி சந்திரன் மறையும் நேரம், அக்கணக்குப்படி தேதியைக் கணக்கெடுக்கும்போது ஜுலை 22- ஆம் நாள் என்று கண்டார்கள். கல்தேயர் சூரிய கிரணங்களை கணக்கு வைத்திருந்தார்கள். அதன் பிரகாரம் கணக்கெடுத்துப் பார்க்கும்பொழுது யோசுவாவின் யுத்த நாள் ஒரு செவ்வாய்க்கிழமை என்று கண்டார்கள். பின்பு நமது தற்கால சூரிய கிரணப்படி கணக்கெடுத்துப் பார்க்கும்ப்பொழுது அந்த யுத்த நாள் ஒரு புதன்கிழமை என்று கணப்பட்டது. இவைகளைத் திருப்பித் திருப்பி சரி பார்த்தும் அதே விடைதான் கிடைத்தது; ஆகவே செவ்வாய்க்கிழமையும் புதன்கிழமையும் ஜுலை 22-ஆம் தேதி என்று கருத வேண்டியதாயிற்று. இது 1936-ஆம் ஆண்டு கம்யூட்டர்கள் அதிக பழக்கத்தில் இல்லாத காலத்தில் கணக்கிடப்பட்டது.
ஆனால் சமீப காலத்தில் வெளிக்கிரகங்களுக்குக் கோள்களை அனுப்புவதற்கு கம்யூட்டர்களைக் கொண்டு கணக்கெடுக்கப்படும்பொழுது ஒரு குறிப்பிட்ட நாளில் கிரகங்கள் எந்தெந்த இடங்களில் இருந்திருக்கும் என்றும், பூமியின் சூழற்சியைப்பற்றியும் பற்பல தகவல்களைச் சேகரித்துக் கொண்டிருக்கும் போது கம்யூட்டர் ஓர் இடத்தில் வந்து இயங்க மறுத்து விட்டது; என்ன கோளாறு என்று கம்யூட்டரை இயக்கியவர்கள் தேடும்பொழுது ஒரு கால கட்டத்தில் ஒரு நாள் விடுப்பட்டுப் போயிற்று என்று கண்டு பிடித்தனர். இது எப்படி இருக்க முடியும் என்று அவர்கள் தங்கள் மண்டைகளைப் போட்டுக் குழப்பிக்கொண்டிருக்கும்பொழுது ஒரு வாலிபன் தான் ஓய்வு நாள் பாடசாலையில் யோசுவாவின் காலத்தில் ஒரு நாள் சூரியன் நின்றுபோனதாகப் படித்ததாகக் கூறினான். உடனெ பரிசுத்த வேதாகமத்தைப் புரட்டி யோசுவா 10:12-14 வசனங்களைக் கண்டு பிடித்து அதில் கூறப்பட்டிருக்கும் தகவல்களின் படி கணக்கெடுக்கும் போது அந்த நாளில் 23 மணி 20 நிமிடங்கள் காலம் நின்று போயிருக்கிறது என்று கண்டு பிடித்தனர். அப்படியென்றால் இன்னும் 40 நிமிடங்களுக்கு என்ன செய்வது என்று யோசிக்கும் போது அதே வாலிபன், அதற்கும் பரிசுத்த வேதகமத்தில் விடை இருக்கிறது என்று வேதாகமத்தை புரட்டத் துவங்கினான். கடைசியில் கண்டு பிடித்தும் கொடுத்தான்.
எசேக்கியா அரசன் மரணத்துக்கு ஏதுவான வியாதிப்பட்டு கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணிய போது ஆண்டவர் ஏசாயா தீர்க்கதரிசியின் மூலமாக அவனுடைய வயதோடே 15 ஆண்டுகளைக் கூட்டுவேன்; இதற்கு ஆதாரமாக சூரிய கடிகாரத்தில் 10 பாகை பின்னிட்டுத் திருப்பிக் காண்பிப்பேன் என்று கூறியிருப்பதையும் அதன்படியே கடிகாரத்தின் 10 பாகை பின்னிட்டு திரும்பியதையும் வாசித்துக் காண்பித்தான். (ஏசாயா 38:7-8)
2 இராஜாக்கள் 20:8-11 (கி.மு.713):
"எசேக்கியா ஏசாயாவை நோக்கி: கர்த்தர் என்னைக் குணமாக்குவதற்கும், மூன்றாம் நாளிலே நான் கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவதற்கும் அடையாளம் என்ன என்றான். அதற்கு ஏசாயா: கர்த்தர் தாம் சொன்ன வார்த்தையின்படியே செய்வாரென்பதற்கு, கர்த்தரால் உனக்கு உண்டாகும் அடையாளமாகச் சாயை பத்துப் பாகை முன்னிட்டுப் போக வேண்டுமா, பத்துப் பாகை பின்னிட்டுப் போக வேண்டுமோ, என்று கேட்டான். அதற்கு எசேக்கியா: சாயை பத்துப் பாகை முன்னிட்டுப் போகிறது லேசான காரியம்; அப்படி வேண்டாம்; சாயை பத்துப் பாகை பின்னிட்டுத் திரும்ப வேண்டும் என்றான்.அப்பொழுது ஏசாயா தீர்க்கதரிசி கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகையில், அவர் ஆகாசுடைய சூரிய கடிகாரத்தில் பாகைக்குப் பாகை முன் போன சாயை பத்துப் பாகை பின்னிட்டுப் திரும்பும்படி செய்தார்."
பாகை என்பது ஆங்கிலத்தில் டிகிரி என்று கூறப்படும். பூமி சுற்றுகையில் ஒரு டிகிரி போக நான்கு நிமிடங்கள் ஆகிறது. அப்படியானால் பத்து டிகிரி (பாகை) போக 40 நிமிடங்கள் ஆகும். ஆகவே எசேக்கியாவுக்கு ஆண்டவர் கால கணக்கில் 40 நிமிடங்களை பின்னிட்டு தள்ளினார்.
யோசுவாவின் காலத்தில் 23 மணி 20 நிமிடங்கள் காலம் நிறுத்தப்பட்டது:
எசேக்கியாவின் காலத்தில் 40 நிமிடங்கள் காலம் பின்னிட்டு தள்ளப்பட்டது. ஆக மொத்தம் 24 மணி நேர காலம் நின்று போனது. (யோசுவா 10:13,ஏசயா 38:8) இவை இரண்டையும் கம்யூட்டரில் சேர்த்துக் கணக்கு போட்டவுடன் கம்யூட்டர் சரியாக கணக்கைச் செய்ய ஆரம்பித்ததாம்.
இப்படியாக தற்காலத்து கம்யூட்டர் யுகத்தில் பரிசுத்த வேதாகமத்தில் கூறப்பட்ட யோசுவாவின் காலத்தில் ஏறக்குறைய ஒரு நாள் காலம் நின்றது என்பதும் எசேக்கியாவின் காலத்தில் 40 நிமிடங்கள் காலம் பின்னிட்டது என்பதும் ஏதோ அர்த்தம் அற்ற கட்டுக் கதைகளல்ல; உண்மையான நிகழ்ந்த நிகழ்ச்சிகள் என்பது ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது. இவ்விதமாக கர்த்தருடைய வேதம் குறைவற்றது என்பது நிரூபிக்கப்படுகிறது.
தமிழ் நாடும் இலங்கையும் பூமத்திய ரேகைக்குப் பக்கத்தில் உஷ்ண மண்டலத்தில் உள்ளது.ஆகையால் சூரிய வெளிச்சத்தில் மிகுதியான் பகலில் சந்திரனை கண முடிவதில்லை. என்றாலும் சில சமயங்களில் காலை 10 மணிக்குக் கூட சந்திரன் வானத்தில் தென்படும். அப்படியிருக்கும் போது பலஸ்தீனா நாடு 32 டிகிரி வடக்கே தள்ளி, சமசீதோஷண மண்டலத்தில் உள்ளபடியால் அங்கு பகல் 12 மணிக்குக் கூட சந்திரனை கண முடியும்; இதை வேதத்தில் குறை என்று காட்டுகிறவர்கள் தங்கள் அறிவீனத்தைத்தான் எடுத்துக்கொட்டுகிறார்கள். நன்றி.
நன்றி.எஸ்.டி.அம்புரோஸ் (குன்னூர், தமிழ் நாடு,இந்தியா.)
பரிசுத்த வேதாகமும்,விஞ்ஞானமும்.