ஒருவரைத் தேவன் எதற்காகப் படைத்தாரோ அதைத் தன் வாழ்க்கையில் அவர் செய்து நிறைவேற்றியிருக்கிறாரா என்பதுதான் வெற்றியான கிறிஸ்தவ வாழ்க்கையின் முடிவான பரிசோதனையாகும். நாம் வாழ்க்கையின் இறுதியைக் கடந்து நித்தியத்திற்குள் பிரவேசிக்கும்போது வெற்றியின் தெளிவைக் காண்போம். நல்லது, உத்தமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே என்னும் வார்த்தைகளை அப்போது நாம் பரலோகத்தில் கேட்போம். வெற்றியான கிறிஸ்தவ வாழ்க்கைக்கும் நம்முடைய வாழ்க்கையின் நோக்கத்திற்கும் எப்போதும் நேரடித் தொடர்பு உண்டு.
தங்கள் வாழ்க்கையின் நோக்கம் என்னவென்று அநேக மக்களுக்கு ஒரு எண்ணமுமில்லாதிருப்பது துக்கமானதே. முன்பு சோவியத் யூனியனாயிருந்தது தகர்ந்தபோது, நானும் என் மனைவியும் சைபீரியாவுக்குச் சென்றோம். ஒரு இரவு மாஸ்கோவில் செலவிடவேண்டியதிருந்ததால் நாத்தீகக் கொள்கைகொண்ட ஒரு பெண்ணின் வீட்டில் தங்கினோம். அப்பெண்மணி ஒரு பல்கலைக்கழகப் பேராசிரியையாயிருந்தார்கள். நாங்கள் சைபீரியாவில் என்ன செய்யச் செல்லுகிறோம் என்று அவர்கள் கேட்டார்கள். நாங்கள் கிறிஸ்துவைக்குறித்து மக்களுக்குப் போதிக்கப் போகிறோம் என்று நான் அவர்களோடு சொன்னபோது, என் செய்தியின் கருப்பொருள் என்னவென்று கேட்டார்கள். முதல்நாள் நான் வாழ்க்கையின் நோக்கத்தைக்குறித்துப் பேசப்போகிறேன் என்று நான் சொன்னதும் அவர்கள் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு, நீங்கள் பேசுவதைக் கேட்க உங்களோடுகூட நான் செல்லக்கூடுமானால் நலமாயிருக்கும்; எனக்கு வாழ்க்கையில் ஒரு நோக்கமுமில்லை என்று ஆதங்கத்தோடு கூறினார்கள்.
அந்தப் பெண்மணி நான் சந்தித்த அநேக மக்களைப்போலிருக்கிறார்கள். தாங்கள் படைக்கப்பட்டதின் நோக்கத்தைக்குறித்து அவர்களுக்கு ஒரு அறிவுமில்லை. அவர்கள் பிறந்தார்கள், வளர்ந்தார்கள், வேலைசெய்தார்கள், விவாகம்பண்ணினார்கள், குழந்தைகளைப் பெற்றார்கள், வயது முதிர்ந்து மரிக்கிறார்கள். ஆயினும் தாங்கள் படைக்கப்பட்டதின் காரணத்தை அவர்கள் ஒருபோதும் சிந்தித்ததில்லை. அவர்கள்தான் வாழ்க்கையில் அதிகம் வஞ்சிக்கப்பட்டவர்கள். அவர்கள் பட்டணத்தின் நடுவில் வழிதவறிய ஒரு மனிதனைப்போலிருக்கிறார்கள். அம்மனிதன் அங்கு நின்ற ஒரு காவலரிடம் சென்று உதவி கேட்கிறார். காவலரும் அக்கறையோடு அவர் எங்கே செல்லவேண்டுமென்று கேட்கிறார். ஆனால் அந்த மனிதனோ, எனக்குத் தெரியாது என்கிறார். அநேகரும் தங்கள் வாழ்க்கையில் இவ்வாறேயிருக்கிறார்கள். வாழ்க்கையில் அவர்கள் எங்கு செல்லுகிறார்களென்று அவர்களுக்குத் தெளிவான கருத்து ஒன்றுமேயில்லை.
பலருக்கு நோக்கமிருக்கிறது, ஆனால் அது தவறான நோக்கமாயிருக்கிறது. வெற்றி, கீர்த்தி, அதிகாரம் என்னும் ஏணிகளில் ஏற அவர்கள் வெறியோடு முயற்சிக்கிறார்கள். சொத்து, புகழ், பதவி என்பவற்றைச் சேர்ப்பதுதான் வாழ்க்கையின் முக்கியமான குறிக்கோள் என்று அவர்கள் எண்ணுகிறார்கள். ஆனால், அவர்கள்தான் வாழ்க்கையில் மிகவும் ஏமாற்றமடைவார்கள். தங்கள் பணத்தையோ வீடுகளையோ வாகனங்களையோ நண்பர்களையோ தங்களோடு நித்தியத்திற்குள் எடுத்துச்செல்ல முடியாது. ஒரு மனிதன் ஏணியை சுவற்றில் சாய்த்துவைத்து மிகவும் வேகமாக அதின்மீது ஏறுகிறான். ஆனால், சுவரின் உச்சிக்குச் சென்றபின் ஏணியை அவன் தவறான சுவற்றின்மீது சாய்த்து வைத்திருப்பதாகக் கண்டுகொள்ளுகிறான். அவனைப் போன்றவர்களே மேற்கூறிய மக்கள்.
வாழ்க்கையின் நோக்கத்தைப்பொறுத்து மூன்றாவது வகுப்பாருமுண்டு. அவர்கள்தான் வாழ்க்கையின் சரியான நோக்கத்தைக் கண்டுகொண்டவர்கள். அவர்கள் மிகவும் மனரம்மியங் கொண்டவர்கள். இந்நிலையில் நாம் மிகவும் முக்கியமான கேள்விகளுக்கு வருகிறோம். வாழ்க்கையின் உண்மையான நோக்கமென்ன? நம்முடைய வாழ்க்கை முடியும்போது நாம் எதைச்செய்து நிறைவேற்றியிருக்கவேண்டும்? இயேசு இதற்கு மிகவும் எளிதும் ஆனால் அதிக ஆழமுமான பதிலைக் கொடுத்திருகிறார்: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக; இது முதலாம் பிரதான கற்பனை. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்பு கூருவாயாக என்பதே (மத்.22:37,39) என்று இயேசு கூறினார்.
எனவே, தேவனில் முழு இருதயத்தோடு அன்புகூருவதும் நம்மைப்போல பிறரை நேசிப்பதுவுமே வாழ்க்கையின் உண்மையான நோக்கமாகும். இந்த இரண்டு காரியங்களையும் எல்லாரும் செய்வார்களேயானால் நாம் வாழுகிற இந்த உலகம் இதைவிட மிகவும் நல்ல இடமாயிருக்கும். இறுதியாக, நாம் தேவனில் எவ்வாறு அன்புகூருகிறோம் என்பதையும் பிறரை நாம் எவ்வளவு நேசிக்கிறோம் என்பதையும் பொறுத்தே வெற்றியான கிறிஸ்தவ வாழ்க்கை தீர்மானிக்கப்படுகிறது. அத்தகைய நோக்கத்தின் அறிவிலிருந்தே நம்முடைய மீதி எல்லா வெற்றிகளும் ஒழுகுகின்றன.