இயேசு கிருஸ்து இந்த பூமியில் மனித குமாரனாக இருந்த போது, நடந்த இரு சம்பவங்கள் வியப்பளிக்கிறதாக இருக்கிறது. அவைகள் என்னவென்றால்,
1. கெத்சமனே தோட்டத்தில் கதறலோடு அவர் செய்த ஜெபம்.
2. சிலுவையில் பிதாவே! ஏன் என்னை கைவிட்டீர் என கதறிய சம்பவம்.
இயேசு கிருஸ்து துக்கப்பட்ட, வேதனைப்பட்ட சில சம்பவங்கள் வேதத்தில் உள்ளன. மேற்கண்ட இந்த இரு சம்பவங்களை தவிர, மற்ற இடங்களில் அவர் வேதனைபட்டது பிற மக்களின் துயர நிலையை கருத்தில் கொண்டே அவர் துக்கப்பட்டார்.. இது அவரது அன்பினாலும், இரக்கத்தினாலும், கருணையினாலும் அவர் பிறருக்காக பட்ட துக்கமாகும்.
ஆனால் மேற்கண்ட இரு சம்பவங்களிலும் அவர் தனக்காக துக்கப்பட்டிருக்கிறார் என்பதை அறிய முடியும்.
இந்த பூமியில் அனேக ஞானமுள்ள மனிதர்கள் இருந்திருக்கின்றனர். அவர்கள் மரணம் என்பது இறுதியானது அல்ல என்றும், அதன் பிறகும் ஆத்துமா வாழ்வதால் மரணம் என்பது கவலைப்பட வேண்டிய சம்பவம் இல்லை என்றும் சொல்லியிருக்கின்றனர்.
அவர்கள் எந்த கவலையும் இல்லாமல் தங்கள் மரணத்தை சந்தித்திருக்கின்றனர். இயேசு கிருஸ்துவும், வெறும் உடலை மட்டும் கொல்ல வல்லவர்களுக்கு பயப்படாதிருங்கள். உயிருக்கு அஞ்சாமல் உங்கள் பணியை ஆற்றுங்கள் என தன் சீடர்களுக்கு உபதேசித்திருக்கிறார்.
அனேக ராஜாக்கள், சாதனையாளர்கள், தியாகிகள், விடுதலை வீரர்கள் தங்கள் உயிரை ஒரு பொருட்டாக மதிக்காமல் தாங்கள் மேற்கொண்ட பணியை தீவிரமாக நடப்பித்து எதற்கும் அஞ்சாமல் தங்கள் உயிரை இழந்திருக்கின்றனர் / பணயமாக வைத்திருக்கின்றனர். இயேசு கிருஸ்துவின் சீடர்கள் பலரே தங்கள் உயிரை ஒரு பொருட்டாக எண்ணாமல் இரத்த சாட்சியாக மரித்துள்ளனர்.
சாதாரணமாக எண்ணப்படும் உலகத்துக்குரிய மக்களே அஞ்சாமல் தங்கள் மரணத்தை சந்திப்பது / சந்தித்திருப்பது உண்மையாய் இருக்கிறபடியால், ஞானமே வடிவாக விளங்கும் இயேசு கிருஸ்து தனக்காக துயரப்பட்ட இந்த இரு சம்பவங்கள் மனதை நெருடுவதாக இருக்கிறது.
வேதத்தில் உள்ள இந்த நிகழ்வுகளை படிக்கும் சிலர், அவரை மரணத்துக்கு பயந்தவராகவும், உலகத்தின் மேல் மிகுந்த பற்று கொண்டு அதை விட்டு பிரிய மனமில்லாத சாதாரண உலக மனிதனை போலவும் சித்தரிக்கின்றனர்.
சிலுவையில் மரணிக்க வேண்டும் என்ற தன்னை குறித்த தேவனுடைய சித்தத்தை அவர் நன்றாக அறிவார். ஆனால் பிதாவாகிய தேவன் தன்னை காப்பார், அவருடைய சித்தத்தை மாற்றி கொள்வார் என இயேசு கிருஸ்து கடைசி வரை எதிர்பார்த்தார். அதற்காகவே அவர் இரத்தம் சிந்தி ஜெபித்தார். அது நிறைவேறாததினாலேயே அவர் துயரப்பட்டார் என சொல்கின்றனர்.
உலக பிரகாரமான மனிதர்கள் சொந்த பந்தம். வீடு, செல்வம், புகழ், பொன், பொருள், உயிர் பயம் இவைகளை உடையவர்களாய் இருக்கின்றனர். அதனால் இவைகளினால் எப்போதும் உயிரோடு இருக்க வேண்டும் என ஆசைப்படுகின்றனர்.
ஆனால் இயேசுவுக்கோ தன்னுடைய சீடர்களை தவிர, சொந்த பந்தங்கள் என்று எதுவும் கிடையாது. வீடு, சொத்து, சுகம் என்பதுவும் இல்லை. அதனால் இவர் உயிரின் மேல் ஆசைப்படவோ, மரணத்தை கண்டு அஞ்சவோ எந்த முகாந்திரமும் இல்லை என்பதை அறிய முடியும்.
ஆகவே அவர் ஏன் துயரப்பட்டார் என்பதை ஆராய வேண்டியது அவசியமாகிறது.
முதலில் அவர் சிலுவையில் பிதாவாகிய தேவனை நோக்கி, என்னை ஏன் கைவிட்டீர்? என கதறிய சம்பவத்தை எடுத்து கொள்ளலாம்.
மத்தேயு 27:46 ஒன்பதாம் மணி நேரத்தில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.
மாற்கு 15:34 ஒன்பதாம்மணி நேரத்திலே, இயேசு: எலோயீ! எலோயீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு: என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.
இயேசு கிருஸ்து பூமியில் வாழ்ந்த நாட்களில், பிதாவாகிய தேவனுக்கு, அவருடைய சித்தத்துக்கு தன்னை ஒப்புக் கொடுத்த ஒரு வாழ்க்கை வாழ்ந்து வந்தார். எல்லாவற்றையும் பிதாவாகிய தேவனுக்கு ஒப்புக் கொடுத்திருந்த அவரிடமும் சிறிது சுயம் இருந்தது. ஆனால் அதை உண்மையில் சுயம் என்று கூட சொல்ல முடியாதது.
அது என்னவெனில் நான் எப்போதும் என் பிதாவோடு தொடர்பு கொண்டிருக்கிறேன் / கொள்ளுவேன், அவர் எப்போதும் என்னோடு கூட இருப்பார் என்ற எண்ணமே அது. என்னுடைய தந்தை, அவருடனான என் உறவு என்ற தந்தையை குறித்த ,அவரது உரிமையினால் வந்த சுயமே அது.
உலக மக்களின் இரட்சிப்புக்காகவும், நன்மைக்காகவும் அவர் உறுதியாய் பற்றி கொண்டிருந்த பிதாவினுடனான தனது தொடர்பையும் சிலுவையில் தியாகம் செய்ய வேண்டியிருந்தது. அவர் சிலுவையில் இருந்த போது, பிதாவாகிய தேவன் அவரை இமைப் பொழுது கைவிட்டார். எப்போதும் தன் தந்தையுடன் இணைந்திருந்து, அவரே கதி என்று இருந்த இயேசு கிருஸ்து பிதா தன்னை கைவிட்ட போது துடித்து போனார்.
அவர் தன்னை கைவிட்டதை தன் ஆவியில் உணர்ந்தார். என் தேவனே! என் தேவனே! ஏன் என்னை கைவிட்டீர் என அவரை நோக்கி கதறினார். இப்படி ஆகும் எனபதை அவர் முன்பே அறிந்திருந்தாலும் கூட இதை அவரால் தாங்க முடியவில்லை.
யார் கைவிட்டாலும், உலக பொருள் எது போனாலும், உடலுக்கு எந்த துன்பம் வந்தாலும் தேவனை நோக்கி பார்க்கலாம். ஆனால் தேவனே கைவிடும் போது யாரை நோக்கி பார்க்க முடியும். இதுவே இயேசு கிருஸ்துவுக்கு சிலுவையில் நடந்தது.
பிதாவாகிய தேவன் அவர் மேல் எல்லா மனிதர்களின் பாவத்தையும் சுமத்தியிருந்தார். அந்த பாவங்களுக்கு எல்லாம் தண்டனையாக, தன்னுடைய சொந்த குமாரனாக இந்த பூமியில் வந்த தன் வார்த்தையானவரையே கைவிட்டார்.
இயேசு கிருஸ்து இந்த பூமிக்கு வந்தது தனக்காக வரவில்லை. பிதாவின் சித்தத்தை நிறைவேற்றுவதன் மூலம் மற்ற மனிதர்களை இரட்சிக்கவே அவர் வந்தார். அவரை நோக்கி பார்த்து கொண்டிருந்த தன் முகத்தை அவர் மறைத்து கொண்டார்.
ஏசாயா 54:7 இமைப்பொழுது உன்னைக் கைவிட்டேன்; ஆனாலும் உருக்கமான இரக்கங்களால், உன்னைச் சேர்த்துக்கொள்வேன்.
ஏசாயா 54:8 அற்பகாலம் மூண்ட கோபத்தினால் என் முகத்தை இமைப்பொழுது உனக்கு மறைத்தேன்; ஆனாலும் நித்திய கிருபையுடன் உனக்கு இரங்குவேன் என்று கர்த்தராகிய உன் மீட்பர் சொல்லுகிறார்.
இவ்வாறு பிதாவின் பிரிவை தாங்க மாட்டாமல் பிதாவை நோக்கி கதறிய அவர், உடனே அவருடைய சித்தத்துக்கு தன்னை அர்ப்பணிக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து கொண்டார். உலக மக்களின் நன்மைக்காக, தான் உயிரினும் மேலாக நேசித்த, தன் தந்தையுடனான தொடர்பையும் அவர் சிலுவையில் தியாகம் செய்தார்.
அவருடைய தந்தை தேவனாக இருப்பதனால், அவர் தன் தந்தையின் மீது கொண்ட பாசத்தை சுயம் என்று கூட சொல்ல முடியாது. இவ்வாறு சுயத்தின் கடைசி மிச்சத்தையும் கூட அவர் தேவனுக்கு அர்ப்பணித்தார்.
இயேசு கிருஸ்துவின் பாடுகளாக அவர் சிலுவை சுமந்த போதும், அவர் சிலுவையில் அறையப்பட்ட போதும் அவர் பட்ட துன்பங்களை சொல்கின்றனர். ஆனால் ஞானியான அவருக்கு உடல் ரீதியான இந்த துன்பங்கள் ஒரு பொருட்டல்ல.
அவர் அடைந்த பெருந்துன்பம் அவர் கைகளில், கால்களில் அடிக்கப்பட்ட ஆணிகளால் அல்ல. தேவன் அவரை கைவிட்டதே ஆகும். இது அவர் ஆத்துமாவில் அடிக்கப்பட்ட ஆணியாகும்.
அவர் சிலுவையில் கொஞ்ச நேரம் கதி கலங்கினாலும், உடனே தன்னுடைய ஞானத்த்தால் இவ்வாறு நடக்க வேண்டிய தேவ சித்தம் என்றும், அதற்கு தன்னை ஒப்படைப்பது மிகவும் முக்கியம் என உணர்ந்தார். பிதாவாகிய தேவனின் சித்தத்துக்கு தன்னை ஒப்புக் கொடுத்து, பிதாவே உம்முடைய கையில் என் ஆவியை ஒப்படைக்கிறேன் என அவர் சொல்லி தன் கடைசி பிடிமானத்தையும் தேவனுக்கு அர்ப்பணித்த அந்த நேரத்தில்தான் அவர் கிருஸ்துவாக, தேவனால் அபிஷேகம் செய்யப்பட்டவராக, ஆனார். கிருஸ்துவாக போகும் இயேசுவாக இருந்த அவர், கிருஸ்து இயேசுவாக சிலுவையில் ஆனார்.
அவர் தேவ குமாரனாக இருந்தும், மனிதனாகவே வந்து மரண பரியந்தமும் தன்னை தேவனுக்கு ஒப்புக் கொடுத்ததின் மூலம் தேவ குமாரனகிய கிருஸ்து என்ற தகுதியை தன்னுடைய செயலினால் சம்பாதித்து கொண்டார்.
சுயத்தை, நான் என்ற எண்ணத்தை தேவனிடத்தில் இழக்கும் போது, தேவ குமாரனகிய கிருஸ்து அங்கே உதயமாகிறர்.
I (சுயம்) & - (இழத்தல்) = + தேவ குமாரன்
என்பதே சிலுவை சொல்லும் செய்தியாகும்.
நம்முடைய சுயம் தேவ ஆவியால் அழிக்கப்படும் போது அங்கே, தேவ ராஜ்ஜியம் உதயமாகிறது.
இதிலிருந்து இயேசு கிருஸ்து சாதாரண உலக பிரகாரமான மனிதர்கள் போல தன் உயிருக்காக பயந்தும், உலக பொருள்களை விரும்பியும் சிலுவையில் பிதாவாகிய தேவனை நோக்கி கதறவில்லை என்பது தெளிவாக தெரிய வரும்.
இயேசு சுவாமியின் அன்பையும் தன் தகப்பனை பிரிந்த அந்த நொடியை தாங்க முடியாமல் அவர் பட்ட பாடுகளையும் வாசிக்கும் போது நெஞ்சம் உடைகிறது..
ஆனால் சுயம் என்ற சொல்லை அவருக்கு பாவிக்கும் போது இதயம் வலிக்கிறது ஏனென்றால் அவர் எந்த சுயத்தையும் உடையவராக காணப்படவில்லை.
எல்லாவற்றையும் எமக்காகவே தந்த அந்த அன்பு தெய்வத்திடம் சுயம் என்ற ஒன்று இருக்க வில்லை..
சகோ. சந்தோஷ் சொன்னது போல அவர் தன் தகப்பனை பிரிய போகிற நேரத்தை நினைத்து கெத்சமனே பூங்காவிலும் ஏன் என்னை கைவிட்டீர் என்று தன் தகப்பனை பிரிந்த நேரத்தில் சிலுவையிலும் கதறினார் .. ஆனால் அங்கு சுயம் இல்லை .. நான் என் தகப்பனை பிரிய முடியாமல் தவிப்பதில் சுயம் இல்லை அவர் மீது கொண்ட அன்பே இருக்கிறது.. எனவே சுயம் என்ற வார்த்தைக்கு பதில் அன்பே என்று கூறலாம்..
மேலும் எனது கருத்துப்படி சொல்ல முட்படுவது என்ன என்றால் கர்த்தராகிய இயேசுவே பிதாவை பிரியும் போது அவ்வளவு துக்கப்பட்டார் என்றால் இன்று நாம் தேவனை தேடாமல் இருக்கும் போது எவ்வளவு வேதனை பட அவசியமாயிருக்கிறது.. அவரை மறந்து பிறந்து வாழுகிறவர்கள் எவ்வளவு துக்கப்பட வேண்டி இருக்கிறது?
எனவே தேவனை பிரியாதபடி அவரையே சார்ந்து வாழ கடவோம்....