நமது வேதாகமத்தின்படியே கர்த்தரை கண்டதாக கூறும் தீர்க்கதரிசிகளிடம் கர்த்தர் பற்றி விசாரித்து பார்க்கலாமா?
முதலில் ஏசாயாவிடம் கேட்கலாம்.
நான்: வேதாகம தீர்க்கத்தரிசன புத்தகங்களில் 66 அதிகாரம் கொண்ட நீண்ட தரிசனங்களை கண்டுரைத்த ஏசாயா அவர்களே, தங்க ஊழிய நாட்களில் எப்பொழுதாவது நீங்கள் ஆண்டவரை கண்டுள்ளீர்களா?
ஏசாயா 6:1உசியா ராஜா மரணமடைந்த வருஷத்தில், ஆண்டவர் உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கக்கண்டேன்;
நான் : தேவ மனுஷனே! எனக்கு மிகுந்த ஆச்சர்யமும் அச்சமுமாக இருக்கிறது. சேனைகளின் தேவனாகிய கர்த்தரை காண முடியுமா? கர்த்தரை உங்கள் கண்களே கண்டதா ?
ஏசாயா 6:5சேனைகளின் கர்த்தராகிய ராஜாவை என் கண்கள் கண்டதே!
நான் : ஏசாயா தீர்க்கனே! அவரை பற்றி அறிய ஆவலாக இருக்கிறேன். கர்த்தரின் மகிமையில் ஒன்றே ஒன்றை சொல்ல முடியுமா?
நான் : அவர் வஸ்த்திரத்தின் மகிமையே தேவாலயம் நிறையும் அளவுக்கு பிரசன்னமாக இருந்ததா? எனக்கும் அதை காணவேண்டும் என்று ஆவல் எழுகிறது. அத்தோடு கர்த்தருக்கு பக்கத்தில் வேறு எதையாவது/யாரையாவது பார்த்தீர்களா? அவர்கள் ஏதாவது சொன்னார்களா?
ஏசாயா 6:2. சேராபீன்கள் அவருக்கு மேலாக நின்றார்கள்; அவர்களில் ஒவ்வொருவனுக்கும் அவ்வாறு செட்டைகளிருந்தன; அவனவன் இரண்டு செட்டைகளால் தன் தன் முகத்தை மூடி, இரண்டு செட்டைகளால் தன் தன் கால்களை மூடி, இரண்டு செட்டைகளால் பறந்து; 3. ஒருவரையொருவர் நோக்கி: சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது என்று கூப்பிட்டுச் சொன்னார்கள்.
நான் : சேராபீன்களாகிய தேவ தூதர்கள் அவருக்கு மேலாக நின்றார்களா! அவர்களையும் தாங்கள் பார்த்தீர்களா? அவ்வாறு கர்த்தரை தாங்கள் கண்டபோது தங்களுக்கு என்ன நேர்ந்தது? தாங்கள் ஏதாவது பேசினீர்களா?
ஏசாயா 6:5. அப்பொழுது நான்: ஐயோ! அதமானேன், நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன், அசுத்த உதடுகளுள்ள ஜனங்களின் நடுவில் வாசமாயிருக்கிறவன்;..... என்றேன்.
நான் : தாங்கள் அசுத்த உதடுள்ள மனுஷன் என்று இருதயத்தில் உணர்த்தப்பட்டு கதறினீர்களா? அப்பொழுது அங்கு என்ன நடந்தது ஐயா?
ஏசாயா 6:6. அப்பொழுது சேராபீன்களில் ஒருவன் பலிபீடத்திலிருந்து, தன் கையிலே பிடித்த குறட்டால் ஒரு நெருப்புத் தழலை எடுத்து, என்னிடத்தில் பறந்து வந்து, 7. அதினால் என் வாயைத் தொட்டு: இதோ, இது உன் உதடுகளைத் தொட்டதினால் உன் அக்கிரமம் நீங்கி, உன் பாவம் நிவிர்த்தியானது என்றான்.
நான் : அப்படியெனில் பலிபீட அக்கினி பட்டால் அக்கிரமம் நீங்கும் என்று அறிய முடிகிறது. அதற்க்கு ஒப்பாக இயேசுவின் பலியால்
நம்முடைய பாவங்கள்/அக்கிரமங்கள் நீங்க வழியுண்டு என்பதும் உறுதி செய்யபடுகிறது.
நல்லது ஐயா! அடுத்து ஆண்டவர் தங்களிடம் ஏதாவது பேசினாரா?
ஏசாயா 6:8. பின்பு யாரை நான் அனுப்புவேன், யார் நமது காரியமாய்ப் போவான் என்று உரைக்கிற ஆண்டவருடைய சத்தத்தைக் கேட்டேன். அதற்கு நான்: இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும் என்றேன்.
நான்: யாரை அனுப்புவேன் என்று கர்த்தர் கேட்டதும் நான் போகிறேன் என்று சற்றும் தாமதிக்காமல் உடன்பட்டதற்கு நன்றி ஐயா.
ஆமாம், ஆண்டவர் தங்களை எங்கு அனுப்பினார்? என்ன சொல்ல சொன்னார்?
ஏசாயா 6.9. அவர்: நீ போய், இந்த ஜனங்களை நோக்கி: நீங்கள் காதாரக் கேட்டும் உணராமலும், கண்ணாரக்கண்டும் அறியாமலும் இருங்கள் என்று சொல் 10. இந்த ஜனங்கள் தங்கள் கண்களினால் காணாமலும், தங்கள் காதுகளினால் கேளாமலும், தங்கள் இருதயத்தில் உணர்ந்து குணப்படாமலும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலுமிருக்க, நீ அவர்கள் இருதயத்தைக் கொழுத்ததாக்கி, அவர்கள் காதுகளை மந்தப்படுத்தி, அவர்கள் கண்களை மூடிப்போடு என்றார்.
நான் : கண்களை காதுகளை இருதயத்தை மூடிப்போட சொன்னாரா? எல்லா ஜனங்களுக்குமா? அப்படியெனில் நம் கண்கள் / காதுகள் / இருதயம் எல்லாம் மூடி கிடக்கிறதா? மூடிப்போன கண்களை வைத்தா இந்த உலகத்தை நான் பார்க்கிறேன்! மந்தமான இருதயத்தை வைத்தா நான் என்னவெல்லாமோ யோசித்துக்கொண்டு இருக்கிறேன் புரிந்துகொள்ள கடினமாக இருக்கிறதே!
எந்த நாள் வரைக்கும் இப்படியிருக்கும் என்று தாங்கள் கர்த்தரிடம் கேட்க வேண்டியது தானே?
ஏசாயா 611. அப்பொழுது நான்: ஆண்டவரே, எதுவரைக்கும் என்று கேட்டேன். அதற்கு அவர்: பட்டணங்கள் குடியில்லாமலும், வீடுகள் மனுஷசஞ்சாரமில்லாமலும் பாழாகி, பூமி அவாந்தரவெளியாகி, 12. கர்த்தர் மனுஷரைத் தூரமாக விலக்குவதினால், தேசத்தின் நடுமையம் முற்றிலும் அசைக்கப்படும்வரைக்குமே. 13. ஆகிலும் அதில் இன்னும் பத்திலொரு பங்கிருக்கும், அதுவும் திரும்ப நிர்மூலமாக்கப்படும்; கர்வாலிமரமும் அரசமரமும் இலையற்றுப்போனபின்பு, அவைகளின் அடிமரம் இருப்பதுபோல, அதின் அடிமரமும் பரிசுத்த வித்தாயிருக்கும் என்றார்.
நான் : "கர்த்தர் மனுஷனை தூரமாக விலக்கும்வரை" என்று சொல்லியுள்ளாரே! எனவே சுருக்கமாக சொன்னால் ஆண்டவரின் இரண்டாம் வருகைக்கு பின்னர்தான் நமது அடைபட்ட அவயங்கள் திறக்கும்போல் தெரிகிறது. அதற்க்கு முன்னர் அடைபட்ட அவயங்கள் திறக்க ஏதாவது வழி இருக்கிறதா? தங்களுடைய செவிகள் அல்லது கண்கள் திறக்கபட்ட அனுபவம் ஏதாவது உண்டா?
ஏசாயா 50:5கர்த்தராகிய ஆண்டவர் என்செவியைத் திறந்தார்; நான் எதிர்க்கவுமில்லை, நான் பின்வாங்கவுமில்லை.
நான் : ஓஹோ ஆண்டவர் ஒருவரால் மட்டுமே நமது அடைபட்ட செவிகளை / கண்களை திறக்க முடியும்போல் தெரிகிறது.
நல்லது ஐயா! தங்களின் மேலான அனுபவங்களை எங்களோடு பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி. எனக்கும் கர்த்தரை நேரில் கண்டதுபோல் திருப்தியாக இருக்கிறது. இந்த நேர் உரையாடலை படிக்கும் ஒவ்வொருவருடைய பாவமும் நமக்காக பலியான ஆண்டவராகிய இயேசுவின் பலியால் சுத்திகரிக்க பட ஆண்டவரிடம் மன்றாடுவோம்.
-- Edited by SUNDAR on Wednesday 29th of January 2014 02:10:54 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)