கடந்த சில நாட்களுக்கு முன்னர் என் அலுவலகத்தில் எனக்கு கொஞ்சம் அதிகமான ஒய்வு நேரம் கிடைத்தது. எப்பொழுதுமே ஒய்வு நேரத்தில் ஆண்டவருக்காக பதிவுகளை எழுதும் நான், சிலர் ஓயாமல் என்னுடைய பதிவுகளை குறை கூறிக்கொண்டே இருந்ததால் கொஞ்சம் மனகஷ்டமாகி, பதிவுகளை குறைத்துகொண்டிருந்த அந்நேரத்தில் எனக்கு கிடைத்த உபரி நேரங்களில் சில தேவையற்ற படங்களை பார்க்க ஆரம்பித்தேன்.
சுமார் இரண்டு நாட்களில் வீட்டில் என்னுடைய மனைவி "இன்று சாத்தான் என்னுடைய மனதில் பேசினான்" என்றாள். நான் என்ன பேசினான் என்று கேட்டேன். "உன் கணவர் நல்லவன் என்று நீ எண்ணிக்கொண்டு இருக்கிறாய் ஆனால் அவன் நல்லவன் அல்ல. அலுவலகத்தில் இருந்துகொண்டு மோசமான படங்களை அவன் பார்க்கிரான் என்று சொன்னான். ஆனால் நான் நம்பமுடியாது என் கணவர் அப்படிபட்டவர் அல்ல என்று சொன்னேன். ஆனால் அவன் என்னை விடவில்லை திரும்ப திரும்ப அதையே சொல்கிறான். "ஒரு ஸ்திரியை இச்சையோடு பார்ப்பது பாவம்" என்று இயேசு சொல்லியிருக்கிறார் என்றும் சொல்கிறார். நீங்கள் அப்படி ஏதாவது படம் பார்த்தீர்களா? என்று கேட்டாள்.
எனக்கு தூக்கிவாரி போட்டது. யாரும் பார்கவில்லை என்று நான் அலுவலகத்தில் செய்த காரியம், சுமார் 22 கி.மீ தூரம் தள்ளி இருக்கும் அவளுக்கு அப்பொழுதே டிரான்ஸ்பர் செய்யபட்டுள்ளது. என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. பிறகு உண்மையை அவளிடம் ஒத்துக்கொண்டு, சாத்தான் குற்றம் சுமத்தும் பொருட்டு இனி அதுபோன்ற படங்களை பார்க்கவே கூடாது என்று திடமாக முடிவெடுத்தேன்.
இன்றைய காலங்களில் மனுஷர்கள் சுற்றும் முற்றும் பார்த்து தங்களை வேறு யாரும் கவனிக்க வில்லை என்று கருதிக்கொண்டு பல தீய காரியங்களை செய்ய முயல்கிறார்கள். அவ்வாறு மறைத்துக் கொண்டு ஒளிப்பிடங்களில் கிரியை நடத்துவோருக்கு "ஐயோ" என்று வேதம் சொல்கிறது.
ஏசாயா 29:15தங்கள் ஆலோசனையைக் கர்த்தருக்கு மறைக்கும்படிக்கு மறைவிடங்களில் ஒளித்து, தங்கள் கிரியைகளை அந்தகாரத்தில் நடப்பித்து: நம்மைக் காண்கிறவர் யார்? நம்மை அறிகிறவர் யார் என்கிறவர்களுக்கு ஐயோ!
எனவே ஒளிந்துகொண்டு அல்லது ஒளிப்பிடங்களில் கிரியை செய்யும் நீங்கள் யாராக இருந்தாலும் சரி உங்களை கூர்ந்து கவனிக்க எப்பொழுதுமே இரண்டுபேர் ஆயத்தமாக இருக்கிறார்கள் என்பதை நீங்கள் திடமாக அறியவேண்டும்.
1. தேவன்
உங்கள் மேல் கரிசனையுள்ள தேவன் ஒரு தாய் தன் சிறுபிள்ளையை வெளியில் விளையாடவிட்டால் எப்படி கண்காணிப்பாளோ
அதைவிட அதிகமாக எப்பொழுதும் உங்களை கண்காணித்து கொண்டு இருக்கிறார். அவருக்கு மறைவாக நாம் எதுவும் செய்ய முடியாது.
எபிரெயர் 4:13 அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை; சகலமும் அவருடைய கண்களுக்கு முன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும்.
இன்னொன்று சாத்தான்.
I பேதுரு 5:8உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்.
நீங்கள் எங்கு தவருவீர்கள் உங்களை பற்றி தேவனிடம்/மனைவியிடம் நண்பனிடம் அல்லது உங்களுக்கு வேண்டிய அல்லது வேண்டாத யாரிடமாவது பிராது பண்ணி ஏதாவது குழப்பத்தை ஏற்ப்படுத்தலாம் அல்லது தண்டனை வாங்கி கொடுக்கலாம் என்ற நோக்கில் சாத்தானும் உங்களை கண்காணித்துகொண்டு இருக்கிறான்.
நீங்கள் செய்யும் கிரியைகள் மட்டுமல்ல உங்கள் மனதில் ஓடும் எண்ணங்கள் கூட கண்காணிக்க படுகின்றன என்பதற்கு சாட்சியாகவும் என் மனதில் ஓடிய ஒரு எண்ணத்தை அப்படியே என் மனைவியிடம் சாத்தான் சுட்டிகாட்டிய ஒரு சம்பவமும் உண்டு.
எனவே அன்பானவர்களே நீங்கள் எந்த ஒரு காரியத்தை பிறருக்கு தெரியாமல் ஒழித்து செய்யும் முன்னரும் இரண்டுபேர் உங்களை கண்காணிக்கிறார்கள் என்பதை நிச்சயமாக அறியக்கடவீர்கள்.
ஒரு நாள் உண்டு! அந்னாளில் நீங்கள் மறைவில் செய்த அந்த காரியங்கள் வெளிச்சத்தில் போட்டு காண்பிக்கப்படும்.
லூக்கா 12:3நீங்கள் இருளிலே பேசினது எதுவோ, அது வெளிச்சத்திலே கேட்கப்படும்; நீங்கள் அறைகளில் காதிலே சொன்னது எதுவோ, அது வீடுகளின்மேல் கூறப்படும்.
அப்பொழுது அனைவருக்கு முன்னும் வெட்கபட்டுபோகாத படிக்கு. இன்றே மறைவான காரியங்களை செய்யும் முன்னர் அது தேவனுக்கு உகந்ததா என்று ஆராய்ந்தறிந்து பின்னர் செய்யும்படி அன்புடன் வேண்டுகிறேன்.
யோவான் 3:21 சத்தியத்தின்படி செய்கிறவனோ தன் கிரியைகள் தேவனுக்குள்ளாய்ச் செய்யப்படும்கிறதென்று வெளியாகும்படிக்கு, ஒளியினிடத்தில் வருகிறான் என்றார்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)