இன்று அனேக தீர்க்கதரிசிகள் வஞ்சகத்தில் உச்சியில் இருக்கிறார்கள்.
இவர்கள் ஒவ்வொரு புது வருடத்தின்போதும் புது வருடத்துக்கு புது தரிசனத்தை வெளியிடும் முன்னர், கடந்த ஆண்டு தான் சொன்ன தீர்க்கதரிசனத்தை திரும்பி பார்த்து, அதில் எந்த அளவு நிறைவேறி இருக்கிறது என்பதை ஆழமாக ஆராய்ந்தாலே, தான் ஒரு கள்ள தீர்க்கதரிசி என்பது அவர்களுக்கே புரிந்துவிடும்.
ஆனால் அதை அவர்கள் செய்வதில்லை. மாறாக புதியதாக என்ன சொல்லலாம் எப்படி பிரபலமாகலாம் என்ற திட்டத்தில் இறங்கி விடுகிறார்கள். அவர்களின் இருதய ஓட்டத்தை அறிந்த சாத்தானும் அவகளுக்கு ஏற்றாற்போல் புதுபுது பழைய தரிசனங்களை தெரிவிக்கிறான்.
இதில் பரிதாபம் என்னவெனில், இந்த தீர்க்கதரிசிகளுக்கு தாங்கள் வஞ்சிக்கப்பட்டிருப்பது அவர்களுக்கே தெரியாது என்பதுதான். அவர்கள் சொல்லும் வார்த்தை அவர்களுக்கு தேவனிடத்தில் இருந்து வந்தது போலவே தெரியும். அதை நம்பி ஏமாந்து போய்விடுகிறார்கள்!
வேதத்தில் இதுபோல ஒரு சம்பவம் உண்டு:
I இராஜாக்கள் 22:6அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா ஏறக்குறைய நானூறு தீர்க்கதரிசிகளைக் கூடிவரச் செய்து: நான் கீலேயாத்திலுள்ள ராமோத்தின்மேல் யுத்தம்பண்ணப்போகலாமா, போகலாகாதா என்று அவர்களைக் கேட்டதற்கு; அவர்கள், போம், ஆண்டவர் ராஜாவின் கையில்ஒப்புக்கொடுப்பார் என்றார்கள். I இராஜாக்கள் 22:12 சகல தீர்க்கதரிசிகளும் அதற்கு இசைவாகத் தீர்க்கதரிசனம் சொல்லி, கீலேயாத்திலுள்ள ராமோத்துக்குப்போம், உமக்கு வாய்க்கும்;கர்த்தர் அதை ராஜாவின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றார்கள்.
இங்கு நானூறு தீர்க்கதரிசிகள் ஏறக்குறைய ஒரே தீர்க்க தரிசனத்தை சொன்னார்கள்! எப்பொழுதும் கூட்டத்துடன் சேர்ந்து கும்மாளம் அடிப்பது சுலபம்தானே!
ஆனால், கர்த்தரின் வார்த்தையோ மிகாயா என்னும் ஒரே ஒரு தீர்க்கதரிசியிடம் மட்டுமே இருந்தது அத்தோடு மட்டுமல்லாமல், அது இவர்கள் தீர்க்கதரிசனத்துக்கு நேர் எதிர்மறையாக இருந்தது!
இதற்க்கு காரணம் என்ன ? யாருக்கு தேவனின் உண்மையான தரிசனம் கிடைக்கும்?
அதை உண்மை தீர்க்கதரிசி மிகாயாவின் நடைமுறைகளில் இருந்தே நாம் ஆராயலாம்!
மிகாயாவின் மேன்மையான குணங்கள்!
1. ராஜாவை கண்டோ அல்லது அவரின் சேவகர்களைகண்டோ சற்றும் பயப்படாமல் கர்த்தர் சொன்னாதை மாத்திரமே சொல்வேன்! என்ற பிடிவாதம்!
14. அதற்கு மிகாயா: கர்த்தர் என்னிடத்தில் சொல்வதையே சொல்லுவேன் என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்.
2. தன்னை கன்னத்தில் அடித்த சிதேக்கியாவை என்ற பொய் தீர்க்க தரிசி என்று அறிந்து அவனை சற்றும் எதிர்க்கவில்லை.
24. அப்பொழுது கேனானாவின் குமாரனாகிய சிதேக்கியா கிட்டேவந்து, மிகாயாவைக் கன்னத்தில் அடித்து, கர்த்தருடைய ஆவி எந்தவழியாய் என்னைவிட்டு உன்னோடே பேசும்படி வந்தது என்றான்.
3. ராஜா தன்னை சிறையில் அடைக்க சொன்னபோதுகூட அவர்மேல் கோபப்பட்டு அவரை சபிக்கவில்லை.
27. இவனைச் சிறைச்சாலையிலே வைத்து, நான் சமாதானத்தோடே வருமளவும், இவனுக்கு இடுக்கத்தின் அப்பத்தையும் இடுக்கத்தின் தண்ணீரையும் சாப்பிடக்கொடுங்கள் என்று ராஜா சொன்னார் என்று சொல்லுங்கள் என்றான்
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்!
ஆனாலும் மிக முக்கியமாக நான் சொல்ல விரும்புவது, இன்று அனேக தீர்க்கதரிசிகள் அவர்களை யாருமே கேட்காவிட்டலும்கூட தானாகவே முன்வந்து எதெதையோ சொல்லி தங்களுக்கு பெயர்கிடைக்க வேண்டும் என்று பெருமுயற்சி எடுக்கிறார்கள்.
ஆனால் மிகாயாவோ வெறும் கர்த்தரின் வார்த்தைகளை மட்டும் கேட்கவில்லை, மாறாக கர்த்தர் தன பரம சேனையோடு ஆலோசனை பண்ணுவதை தரிசனமாகவே கண்டவன். ஆகினும் ராஜா தீர்க்கதரிசனம் கேட்க விரும்புகிறார் என்றவுடன், சொல்ல ஓடிவந்த 400 தீர்க்கதரிசிகள்போல் ஓடிவந்து தீர்க்க தரிசனம்சொல்ல விரும்பவில்லை! அவனை தேடிபோய் பிடிக்க வேண்டியிருந்தது.
காரணம், கர்த்தர் சொன்னதுதான் நடக்கும் என்பது நிச்சயமாக அவனுக்கு தெரியும்! நாம் சொன்னாலும் யாரும் கேட்க மாட்டார்கள் பின்னர் சொல்லி என்ன பயன்? பாருங்கள் இவன் போய் உண்மை தரிசனத்தை ராஜாவிடம் சொல்லியும் என்ன நடந்தது?
34. ஒருவன் நினையாமல் வில்லை நாணேற்றி எய்தான்; அது இஸ்ரவேலின் ராஜாவினுடைய கவசத்தின் சந்துகளுக்குள் பட்டது; அப்பொழுது அவன் தன் சாரதியைப் பார்த்து: நீ திருப்பி என்னை இராணுவத்துக்கப்பால் கொண்டுபோ; எனக்குக் காயம்பட்டது என்றான். 35. அன்றையதினம் யுத்தம் அதிகரித்தது; ராஜாவைச் சீரியருக்கு எதிராக இரதத்தில் நிறுத்திவைத்தார்கள்; சாயங்காலத்திலே அவன் இறந்துபோனான்
தரிசனம் கேட்டும் பயனேதும் இல்லாமல் தானே போனது!
இன்றும்கூட கர்த்தர் எத்தனையோ பரிசுத்தவான்களிடம் பேசத்தான் செய்கிறார்! ஆனால் அவர்கள் வெளியுலகத்துக்கு வருவதில்லை ஒருவளை அதை அறிந்து அவர்களை தேடிபோய் கர்த்தரின் உண்மை வார்த்தைகளை கேட்டலும், அது அநேகர் மனதுக்கு இனிப்பாக இருப்பது இல்லை! எனவே அதை ஏற்க்க முடியாமல் அதை கேட்க மனதில்லாமல் விலகிவிடுகிறோம்.
இங்கு உண்மை தீர்க்கதரிசியாகிய மிகாயாவை குறித்து ராஜாவின் வார்த்தைகளை கேளுங்கள்!
I இராஜாக்கள் 22:8அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா, யோசபாத்தை நோக்கி: கர்த்தரிடத்தில் விசாரித்து அறிகிறதற்கு இம்லாவின் குமாரனாகிய மிகாயா என்னும் இன்னும் ஒருவன் இருக்கிறான்; ஆனாலும் நான் அவனைப் பகைக்கிறேன்; அவன்என்னைக் குறித்து நன்மையாக அல்ல, தீமையாகவே தீர்க்கதரிசனஞ்சொல்லுகிறவன் என்றான்.
ஆம்! கர்த்தரின் உண்மை வார்த்தைகள் அனேக நேரங்களில் யாருக்காகவோ அல்ல, அது நமக்கே கசப்பாகவே இருக்கும்!
எனவே ஊருக்கு தீர்க்கதரிசனம் சொல்வதை விட்டுவிட்டு முதலில் உங்களுக்காக தேவன் வைத்திருக்கும் கசப்பான வார்த்தை என்ன வென்பதை அறிந்து கொள்ளுங்கள்! எதற்கு நீங்களே முன்வந்து நான் ஒரு கள்ள தீர்க்கதரிசி என்று பறைசாற்றுகிரீர்கள்?
கள்ள தீர்க்கதரிசிகள் குறித்த தேவனின் வார்த்தை மிகவும் கடினமாக இருக்கிறது:
எசேக்கியேல் 13:3கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறதாவது: தாங்கள் ஒன்றும் தரிசியாதிருந்தும், தங்களுடைய ஆவியின் ஏவுதலைப் பின்பற்றுகிறமதிகெட்ட தீர்க்கதரிசிகளுக்கு ஐயோ!
உபாகமம் 18:20சொல்லும்படி நான் கட்டளையிடாத வார்த்தையை என் நாமத்தினாலே சொல்லத் துணியும் தீர்க்கதரிசியும், வேறே தேவர்களின் நாமத்தினாலே பேசும் தீர்க்கதரிசியும் சாகக்கடவன்.
கள்ள தீர்க்க தரிசிகள் சாக வேண்டும் எனபதே தேவனின் தீர்ப்பு!
ஆம்! நீங்கள் தரிசனம் சொல்லி அது நிறைவேறாமல் போவதைவிட சொல்லாமல் இருப்பது சிறந்தது என்று சொல்லுவேன்!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)