இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவுகள் II
Would you like to know more about Swami Vivekananda? [0 vote(s)]

Very much
0.0%
Yes
0.0%
not now
0.0%
not much
0.0%
no
0.0%


புதியவர்

Status: Offline
Posts: 7
Date:
சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவுகள் II
Permalink  
 


3. இந்து மதம் - செப்டம்பர் 19, 1893 இல் வாசிக்கப்பட்டது

வரலாற்றிற்கு முற்பட்ட காலத்திலேயே தோன்றி, இன்றும் நிலைத்து நிற்கும் மதங்கள் மூன்று. அவை இந்து மதம், சொராஸ்டிரிய மதம், யூத மதம் ஆகும். அவை அனைத்தும் பல கடுமையான அதிர்ச்சிகளுக்கு உட்பட்டும், இன்றும் நிலைத்திருப்பதின் வாயிலாக தங்கள் உள் வலிமையை நிரூபிக்கின்றன.


யூத மதம் கிறிஸ்தவ மதத்தைத் தன்னுடன் இணைத்துக் கொள்ளத் தவறியது மட்டுமின்றி, அனைத்தையும் வெற்றி கொண்டதும் தன்னிலிருந்து தோன்றியதுமான கிறிஸ்தவ மதத்தால், பிறந்த இடத்திலிருந்தே விரட்டி அடிக்கப்பட்டுவிட்டது. இன்று தங்கள் பெருமைக்குரிய மதத்தை நினைவு படுத்த ஒரு சில பார்சிகள் மட்டுமே வாழ்ந்து வருகிறார்கள்.


இந்திய மண்ணில் ஒன்றன் பின் ஒன்றாக எத்தனையோ கிளைமதங்கள் உண்டாயின.வேத நெறியின் அடித்தளத்தையே அவை உலுக்கிவிடும் போலத் தோன்றியது. ஆனால், பயங்கரமான நில நடுக்கம் ஏற்பட்டால், எப்படிக் கடலானது சிறிது நேரம் பின்னோக்கிச் சென்று, பின்னர் ஆயிரம் மடங்கு சீற்றத்துடன் பெருகி வந்து அனைத்தையும் வளைத்துக் கொள்கிறதோ, அது போல, எல்லா கிளை மதங்களும் ஆரம்ப ஆரவாரம் ஓய்ந்ததும் மிகப்பெரியதான தாய்மதத்தால் கவர்ந்து இழுக்கப்பட்டு, அதனுள் இரண்டறக் கலந்து விட்டன.


அறிவியலின் இன்றைய கண்டு பிடிப்புகள் எந்த வேதநாதத்தின் எதிரொலிகள் போன்று உள்ளனவோ, அந்த வேதாந்த தத்துவத்தின் மிக உயர்ந்த ஆன்மீகக் கோட்பாடுகள் முதல் பல்வேறு புராணக் கதைகள் கொண்ட மிகச் சாதாரண உருவ வழிபாட்டுக் கருத்துகள், பௌத்தர்களின் சூன்யவாதம், சமணர்களின் நாத்திக வாதம், ஆகிய அனைத்திற்கும் இந்து சமயத்தில் இடம் உள்ளது. அப்படியானால் ஒன்றுக்கொன்று மிகவும் வேறுபட்டு நிற்கும் இவை அனைத்தும் ஒன்று சேரும் பொதுமையம் எங்கே இருக்கிறது, என்ற கேள்வி எழுகிறது. ஒன்று சேரவே முடியாதது போல் தோன்றுகின்ற இவை அனைத்தும் ஒருங்கிணைவதற்கான அடித்தளம் எங்கிருக்கிறது? இந்தக் கேள்விக்குத் தான் நான் விடை கூற முயலப்போகிறேன்.


தெய்வீக வெளிப்பாடான (Revelation) வேதங்களிலிருந்து இந்துக்கள் தங்கள் மதத்தைப் பெற்றுள்ளனர். வேதங்களுக்குத் துவக்கமும் முடிவும் இல்லை என்பது அவர்கள் கூற்று. ஒரு நூலுக்குத் துவக்கமோ முடிவோ இல்லாதிருக்குமா, அது அபத்தம் என்று உங்களுக்குத் தோன்றும். ஆனால் வேதங்கள் என்று குறிப்பிடப்படுவது நூல்கள் அன்று. வெவ்வேறு மக்களால், வெவ்வேறு காலங்களில் திரட்டி வைக்கப்பட்ட, ஆன்மீக விதிகளின் கருவூலமே வேதங்கள். புவியீர்ப்பு விதி, அது கண்டறியப்படும் முன்னரே இருந்தது, மனித இனம் முழுவதும் அதை மறந்து விட்டாலும் அது இருக்கும். அவ்வாறே ஆன்மீக உலகின் விதிகளும். ஓர் ஆன்மாவுக்கும் இன்னோர் ஆன்மாவுக்கும், தனிப்பட்ட ஆன்மாக்களுக்கும் அனைத்து ஆன்மாக்களின் தந்தைக்கும் இடையே உள்ள தார்மீக, ஆன்மீக, நீதி நெறி உறவுகள், அவை கண்டு பிடிக்கப் படுவதற்கு முன்னரும் இருந்தன. நாம் அவற்றை மறந்தாலும் இருக்கும்.


இந்த விதிகளைக் கண்டறிந்தவர்கள் ரிஷிகள் எனப்பட்டனர். பூரணத்துவம் அடைந்தவர்கள் என்று அவர்களை நாங்கள் போற்றுகிறோம். அவர்களுள் மிகச் சிறந்த சிலர் பெண்கள் என்பதைக் கூறுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.


இந்த விதிகள், அவை விதிகளாதலால், முடிவில்லாமல் இருக்கலாம். ஆனால் தொடக்கம் இருந்திருக்க வேண்டுமே என்று கூறலாம். படைப்பு, தொடக்கமும் முடிவும் இல்லாதது என்று வேதங்கள் போதிக்கின்றன. பிரபஞ்ச சக்தியின் மொத்த அளவு என்றும் ஒரே அளவில் தான் இருக்கிறதென்று விஞ்ஞானம் நிரூபித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. அப்படியானால், பிரபஞ்சத்தில் ஒன்றுமே இருந்திராத ஒரு காலம் இருந்திருக்குமானால் இப்போது காணப்படும் சக்தி அனைத்தும் எங்கிருந்தது? அது கடவுளிடம் ஒடுக்க நிலையில்இருந்தது என்று சிலர் கூறுகிறார்கள். அப்படியானால் கடவுள், சில காலம் ஒடுக்க நிலையிலும் சில காலம் இயக்க நிலையிலும் இருக்கிறார் என்றாகிறது. அதாவது, கடவுள் மாறக்கூடிய தன்மையர். மாறக்கூடிய பொருள் கூட்டுப் பொருளாகத் தானிருக்க வேண்டும். எல்லா கூட்டுப் பொருள்களும் அழிவு என்னும் மாறுதலை அடைந்தே தீரவேண்டும். எனவே, கடவுள் இறந்து விடுவார் என்றாகிறது. இது அபத்தம். ஆகையால் படைப்பு இல்லாதிருந்த காலம் ஒரு போதும் இருந்ததில்லை.

 

இதை ஓர் உவமையால் விளக்க நினைக்கிறேன். படைப்புத் தொழிலும், படைப்பவனும், தொடக்கமும் முடிவும் இல்லாது சமதூரத்தில் ஓடுகின்ற இரண்டு இணைகோடுகள். கடவுள் எப்போதும் செயல்பட்டுக்கொண்டிருக்கும் பரம்பொருள். அவரது சக்தியால் ஒழுங்கற்ற நிலையிலிருந்து (Chaos) பல ஒழுங்கு முறைகள் (Systems) ஒன்றன் பின் ஒன்றாகத் தோன்றுகின்றன, சிறிது காலம் செயல்படுகின்றன, பின்னர் அழிந்து விடுகின்றன. இதையே அந்தணச் சிறுவன் தினமும் ஓதுகிறான்: 'பழைய கல்பங்களில் இருந்த சூரியர்களையும் சந்திரர்களையும் போன்றே சூரியனையும் சந்திரனையும் கடவுள் படைத்தார்.' இது தற்கால அறிவியலுக்குப் பொருந்தியதாக உள்ளது.


இங்கு நான் நிற்கிறேன். கண்களை மூடிக்கொண்டு, 'நான், நான், நான்' என்று என்னைப் பற்றி நினைத்தால் என்னுள் என்ன தோன்றுகிறது? உடலைப் பற்றிய எண்ணம்தான். அப்படியானால் சடப் பொருள்களின் மொத்த உருவம் தானா நான்? 'இல்லை' என்கின்றன வேதங்கள். நான் உடலில் உறைகின்ற ஆன்மா. நான் அழிய மாட்டேன். நான் இந்த உடலில் இருக்கிறேன். இது வீழ்ந்து விடும். ஆனால் நான் வாழ்ந்து கொண்டே இருப்பேன். நான் முன்னமும் வாழ்ந்து கொண்டுதான் இருந்தேன். ஆன்மா படைக்கப்பட்டதன்று. படைக்கப்பட்டதாயின் அது பல பொருள்களின் சேர்க்கையாகும். அப்படியானால் வருங்காலத்தில் அது கண்டிப்பாக அழிந்து போக வேண்டும். எனவே, ஆன்மா படைக்கப்பட்டதானால் அது இறக்க வேண்டும்.


சிலர் பிறக்கும்போதே இன்பத்தில் பிறக்கிறார்கள். உடல் வளத்தோடும் வனப்போடும் மனவலிமையோடும், தேவைகள் அனைத்தும் நிறைவேறப் பெற்று வாழ்கிறார்கள். சிலர் துயரத்திலேயே பிறக்கிறார்கள். சிலர் முடமாகவும் நொண்டியாகவும் இருக்கிறார்கள். சிலர் முட்டாள்களாகவே வாழ்ந்து, வாழ்க்கை முழுவதையும் ஏதோ இழுபறி நிலையிலேயேகடத்துகிறார்கள்.


அவர்கள் அனைவரும் படைக்கப் பட்டவர்கள் என்றால், நேர்மையும் கருணையும் உள்ள கடவுள், ஒருவரை இன்பத்தில் திளைப்பவராகவும் இன்னொருவரைத் துன்பத்தில் உழல்பவராகவும் ஏன் படைக்க வேண்டும்? அவர் ஏன் அத்தனை வேறுபாடு காட்டவேண்டும்? இந்தப் பிறவியில் துன்பப்படுபவர்கள் அடுத்த பிறவியில் இன்பம் அடைவார்கள் என்று கூறுவதும் பொருந்தாது. நேர்மையும் கருணையும் கொண்ட கடவுளின் ஆட்சியில் ஏன் ஒருவர் துயருற வேண்டும்?


ஆகவே, படைப்பாளராகிய கடவுள் ஒருவர் இருக்கிறார் என்று கொள்வது இந்த முரண்பாட்டைத் தெளிவு படுத்தவில்லை. மாறாக, எல்லா வல்லமையும் வாய்ந்த ஒருவரின் கொடுங்கோன்மையையே காட்டுகிறது. அப்படியானால், ஒருவன் மகிழ்வதற்கோ துயரத்தில் உழல்வதற்கோ உரிய காரணங்கள், அவன் பிறப்பதற்கு முன்பே இருந்திருக்க வேண்டும். அவையே அவனது முற்பிறப்பின் வினைகள். ஒருவனுடைய உடல், உள்ளம் ஆகியவற்றின் இயல்புகள் பரம்பரையாக வருவது என்று காரணம் காட்டப்படுகிறது அல்லவா?


வாழ்க்கையில் இரண்டு இணை கோடுகள் உள்ளன - ஒன்று மனத்தைப் பற்றியது. இன்னொன்று சடப்பொருளைப் பற்றியது. சடப் பொருளும் அதன் மாற்றங்களும் மட்டுமே நமது இப்போதைய நிலையை விளக்கி விடும் என்றால் ஆன்மா என்ற ஒன்று இருக்கிறது என்று கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் சடத்திலிருந்து எண்ணம் தோன்றியது என்று நிரூபிக்க முடியாது. தத்துவப்படி, ஒரே ஒரு பொருள்தான் இருக்க முடியுமானால் ஆன்மா ஒன்றே ஒன்றுதான் இருக்க வேண்டும் என்பதைப் போல பகுத்தறிவுக்குப் பொருந்தியதே. ஆனால் இவை எதுவும் இப்போது நமக்கு அவசியமில்லை.


பரம்பரையின் மூலம் உடல்கள் சில இயல்புகளைப் பெறுகின்றன என்பதை நாம் மறுக்க முடியாது. ஆனால் குறிப்பிட்ட மனம் குறிப்பிட்ட விதமாகச் செயல்படுவதற்கு ஆதாரமாக இருக்கின்ற ஒரு தூல உருவத்தையே இந்த இயல்புகள் குறிக்கின்றன. இனி, ஆன்மாவுக்கும் கடந்தகால விளைவுகளின் காரணமாகச் சில குறிப்பிட்ட இயல்புகள் ஏற்படுகின்றன. குறிப்பிட்ட இயல்புகளுடன் கூடிய ஆன்மா, குண ஒற்றுமை விதிகளுக்கு (Laws of Affinity)இணங்க எந்த உடலில் பிறந்தால் அந்த இயல்புகளை வெளிப்படுத்த முடியுமோ, அந்த உடலில் பிறக்கிறது. இது அறிவியலுக்கு ஏற்புடையது. ஏனெனில், அறிவியல் எதையும் பழக்கத்தைக் கொண்டே விளக்க விரும்புகிறது. பழக்கமோ எதையும் திரும்பத் திரும்பச் செய்வதால் தான் உண்டாகிறது. ஆகவே புதிதாகப் பிறந்த ஓர் ஆன்மாவின் இயல்புகளை விளக்குவதற்கு, அது அந்தச் செயலைத் திரும்பத் திரும்பச் செய்திருக்க வேண்டும் என்று ஆகிறது. அந்த இயல்புகள் இந்தப் பிறவியில் பெறப்பட்டவை அல்லன. ஆதலால் அவை முந்தைய பிறப்புகளிலிருந்து வந்திருக்க வேண்டும்.


இன்னொரு கருத்தும் இருக்கிறது. இவையெல்லாம் சரியென்றே வைத்துக் கொள்வோம், ஆனால் ஏன் எனக்கு முற்பிறவியைப் பற்றிய எதுவும் நினைவில் இல்லை? இதை எளிதில் விளக்க முடியும். இப்போது நான் ஆங்கிலம் பேசிக் கொண்டிருக்கிறேன். இது என் தாய்மொழி அல்ல. உண்மையில், என் தாய்மொழிச் சொற்கள் எதுவும் என் உணர்வுத் தளத்தில் இப்போது இல்லை. ஆனால் பேசுவதற்குச் சிறிது முயன்றால் போதும், அவை விரைந்து வந்துவிடும். மனக்கடலின் மேற்பரப்பு மட்டுமே உணர்வுப் பகுதி, மனத்தின் ஆழத்தில் தான் அனுபவங்கள் அனைத்தும் திரண்டு கிடக்கின்றன என்பதையே இது காட்டுகிறது. முயலுங்கள், போராடுங்கள், அவை மேலே வரும். முற்பிறவியையும் நீங்கள்அறிய முடியும்.


இது நேரான, நிரூபிக்கப்படக் கூடிய சான்று. நிரூபிக்கப்படுவது தான் ஒரு கொள்கை சரியென்பதற்குச் சான்று. உலகிற்கு ரிஷிகள் விடுக்கும் அறைகூவல் இதுவே: 'நினைவுக் கடலின் ஆழத்தைக் கிளறிவிடும் ரகசியத்தை நாங்கள் கண்டு பிடித்துள்ளோம். முயலுங்கள், முயன்றால் நீங்களும் நிச்சயமாக முற்பிறவியின் நினைவுகளை முழுமையாகப் பெறுவீர்கள்!'



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard