வேற்றுமையில் ஒற்றுமை தான் இயற்கையின் நியதி. அதை இந்து உணர்ந்துள்ளான். பிற மதங்கள் எல்லாம் சில கோட்பாடுகளை நிர்ணயித்து அவற்றைச் சமுதாயம் ஏற்றுக் கொள்ளுமாறு கட்டாயப் படுத்துகின்றன. ஒரே ஒரு சட்டையை வைத்துக் கொண்டு,சமுதாயத்திலுள்ள ஜாக், ஜான், ஹென்றி எல்லாருக்கும் அந்த ஒரு சட்டை பொருந்த வேண்டும் என்று கூறுகின்றன. ஜானுக்கோ, ஹென்றிக்கோ சட்டை பொருந்தா விட்டால் அவர்கள் உடலில் அணியச் சட்டையின்றிதான் இருக்க வேண்டும்.
சார்புப் பொருள்கள் மூலமே எல்லையற்ற இறைவனை உணரவோ, நினைக்கவோ பேசவோ முடியும். திருவுருவங்களும் சிலுவைகளும் பிறைகளும் வெறும் சின்னங்களே, ஆன்மீகக் கருத்துக்களை மாட்டி வைப்பதற்குப் பயன்படும் முனைகளே என்பதை இந்துக்கள் கண்டு பிடித்துள்ளனர். இந்த உதவி எல்லோருக்கும் தேவை என்பது அல்ல.ஆனால், தேவைப் படாதவர்கள், அது தவறு என்று கூற உரிமையில்லை. இந்து சமயத்தில் அது கட்டாயமும் அன்று.
ஒன்று நான் சொல்லவேண்டும். இந்தியாவில் உருவ வழிபாடு என்பது பயங்கரமான ஒன்றல்ல. விலை மகளிரை உருவாக்கும் இடமும் அல்ல. உயர்ந்த ஆன்மீக உண்மைகளைப் புரிந்து கொள்வதற்கு, பக்குவப் படாதவர்களின் முயற்சி தான் உருவ வழிபாடு. இந்துக்களிடம் தவறுகள் உண்டு, சில வேளைகளில் விதி விலக்குகளும் உண்டு. ஆனால் ஒன்றைக் கவனியுங்கள். அவர்கள் தங்கள் உடல்களை வருத்திக் கொள்வார்களே தவிர, அடுத்தவனின் கழுத்தை அறுக்க மாட்டார்கள், இந்து மதவெறியன் தன்னை தீயில் கொளுத்திக் கொள்வானேயன்றி பிறரையல்ல. சூனியக்காரிகள் கொளுத்தப்பட்டதற்கு எப்படிக் கிறிஸ்தவ மதம் பொறுப்பில்லையோ, அதே போன்று இதற்கு இந்து மதம் பொறுப்பல்ல.
இந்துவிற்கு, உலகின் எல்லா மதங்களும், பலவித நிலைகளிலும் சந்தப்பங்களிலும் உள்ள பல்வேறு ஆண்களும் பெண்களும் ஒரே இலக்கை நோக்கிச் செய்கின்ற பயணம்தான். சாதாரண உலகியல் மனிதனிடம் கடவுளை வெளிப்படச் செய்வதுதான் எல்லா மதங்களின் நோக்கமுமாகும். அவர்கள் அனைவருக்கும் எழுச்சியை ஊட்டுபவர் ஒரே கடவுள் தான். அப்படியானால் இத்தனை மாறுபாடுகள் எல்லாம் வெளித் தோற்றமே என்கிறான் இந்து. வெவ்வேறு சூழ்நிலைகளுக்கும் பல்வேறு இயல்புகளுக்கும் ஏற்ப தன்னை மாற்றி அமைத்துக்கொள்ளும் ஒரே உண்மையில் இருந்து தான் இந்த மாறுபாடுகள் எழுகின்றன.
ஒரே ஒளிதான் பல்வேறு வண்ணக் கண்ணாடிகளின் மூலம் பல நிறங்களில் வருகிறது. நம்மை மாற்றி அமைத்துக் கொள்ள இந்த வேறுபாடுகள் அவசியம். ஆனால், எல்லாவற்றின் மையத்திலும் அதே உண்மைதான் ஆட்சி புரிகிறது. கிருஷ்ணாவதாரத்தின் போது இந்துக்களுக்கு பகவான், 'முத்து மாலையிலுள்ள முத்துக்களைக் கோக்கின்ற நூல் போல நான் எல்லா மதங்களிலும் இருக்கிறேன். மக்களினத்தை உயர்த்திப் புனிதப்படுத்தும் அசாதாரணமான தூய்மையும் அசாதாரணமான ஆற்றலும் எங்கெல்லாம் காணப்படுகின்றனவோ அங்கெல்லாம் நான் இருக்கிறேன் என்று அறி' என்று சொன்னார். அதன் பலன்(ஆற்றல்) என்ன? இந்துக்கள் மட்டுமே காப்பாற்றப்படுவார்கள், மற்றவர்கள் காப்பாற்றப் பட மாட்டார்கள் என்று சமஸ்கிருத தத்துவ இலக்கியத்தில் எங்காவது கூறப்பட்டிருக்கிறதா என்று கண்டு பிடிக்கும்படி நான் உலகத்திற்குச் சவால் விடுகிறேன். 'நமது ஜாதிக்கும் கோட்பாடுகளுக்கும் அப்பால் கூட நிறை நிலை பெற்றவர்களைக் காண்கிறோம்' என்கிறார் வியாசர்.
இன்னொன்று: 'அனைத்து எண்ணங்களிலும் கடவுளையே மையமாகக் கொண்ட இந்து, எப்படி சூன்யவாதம் பேசும் பெளத்தர்களையும், நாத்திகவாதம் பேசும் சமணர்களையும் நம்புவான்?' பெளத்தர்களோ, சமணர்களோ கடவுளை நம்பி வாழ்வதில்லை. ஆனால் மனிதனை தெய்வமாக்க வேண்டும் என்னும் எல்லா மதங்களுடையவும் மையக் கருத்து இருக்கிறதே, அதுதான் அவர்களுடைய மதங்களின் முழு நோக்கமாகும். அவர்கள் தந்தையைப் பார்த்ததில்லை. ஆனால் மகனைப் பார்த்துள்ளார்கள். மகனைப் பார்த்தவன் தந்தையையும் பார்த்துள்ளான். சகோதரர்களே! இந்து சமயக் கருத்துக்களின் சுருக்கம் இது தான். தன் திட்டங்களை எல்லாம் நிறைவேற்ற இந்து தவறியிருக்கலாம். ஆனால் என்றாவது உலகம் தழுவிய மதம் (Universal Religion) என்ற ஒன்று உருவாக வேண்டுமானால், அது இடத்தாலும் காலத்தாலும் எல்லைப் படுத்தப்படாததாக இருக்கவேண்டும். அந்த மதம் யாரைப் பற்றிப் பிரசாரம் செய்கிறதோ, அந்தக் கடவுளைப் போன்று அது எல்லையற்றதாக இருக்க வேண்டும். சூரியன், தன் ஒளிக்கிரணங்களை எல்லார் மீதும் சமமாக வீசுவது போன்று அது கிருஷ்ண பக்தர்கள், கிறிஸ்து பக்தர்கள், ஞானிகள், பாவிகள், எல்லோரையும் சமமாக எண்ண வேண்டும். அது பிராமண மதமாகவோ பெளத்த மதமாகவோ கிறிஸ்தவ மதமாகவோ முகம்மதிய மதமாகவோ இருக்காமல், இவற்றின் ஒட்டு மொத்தமாக இருப்பதுடன், இன்னும் வளர்ச்சியடைய எல்லையற்ற இடம் உள்ளதாக இருக்க வேண்டும். விலங்கினங்களைப் போல உள்ள காட்டு மிராண்டி மக்களிலிருந்து, இவரும் மனிதரா என்று சமுதாயம் பயபக்தியுடன் வணங்கி நிற்கும் அளவுக்கு அறிவாலும் இதயப் பண்பாலும் உயர்ந்து, மனித இயல்புக்கு மேலோங்கி விளங்கும் சான்றோர் வரை, எல்லோருக்கும் இடமளித்து, தன் அளவற்ற கரங்களால் எல்லோரையும் தழுவிக் கொள்ளும் பரந்த மனப்பான்மை உள்ளதாக இருக்க வேண்டும். அந்த மதத்தில் பிற மதத்தினரைத் துன்புறுத்தலும், அவர்களிடம் சகிப்புத் தன்மையற்று நடந்து கொள்ளுதலும் இருக்காது. அது ஆண், பெண் எல்லாரிடமும் தெய்வத்தன்மை இருப்பதை ஏற்றுக் கொள்ளும். மனித இனம் தன் உண்மையான தெய்வீகத் தன்மையை உணர்வதற்கு உதவி செய்வதே அதன் நோக்கமாக இருக்கும். அதன் முழு ஆற்றலும் அதற்கே பயன்படும்.
அத்தகைய மதத்தை அளியுங்கள், எல்லா நாடுகளும் உங்களைப் பின்பற்றும். அசோகரின் சபை(மன்றம்) பெளத்த மத சபையாக(மன்றமாக) இருந்தது. அக்பரது சபை(மன்றம்) இதை விடச் சற்று உயர்ந்த நோக்கம் கொண்டதாக இருந்தாலும் வீட்டு சபையாகவே(மன்றமாகவே) இருந்தது. கடவுள் அனைத்து மதங்களிலும் இருக்கிறார் என்று உலகம் அனைத்திற்கும் முழக்கம் செய்ய அமெரிக்கா ஒன்றுக்குத் தான் கொடுத்து வைத்திருந்தது.
இந்துக்களுக்கு பிரம்மாவாகவும், சொராஸ்டிரர்களுக்கு அஹுரா-மஸ்தாவாகவும், பெளத்தர்களுக்கு புத்தராகவும், யூதர்களுக்கு ஜெஹோவாவாகவும், கிறிஸ்தவர்களுக்கு பரமண்டலத்தில் இருக்கும் பிதாவாகவும் இருக்கின்ற ஆண்டவன் உங்கள் உன்னதமான நோக்கம் நிறைவேற உங்களுக்கு வலிமை அளிப்பானாக! விண்மீன் கிழக்கிலே எழுந்து மேற்கு நோக்கி நேராகச் சென்றது. சிலவேளைகளில் மங்கலாகவும், சிலபொழுது ஒளிமிக்கதாகவும் உலகத்தைச் சுற்றியது. இப்போது கிழக்குத் திசையிலே சான்போ நதிக்கரையினில் முன்னைவிட ஆயிரம் மடங்கு ஒளியுடன் மறுபடியும் உதயமாகி(தோன்றி)க் கொண்டிருக்கிறது.
சுதந்திரத்தின்(விடுதலையின்) தாயகமாகிய கொலம்பியாவே, நீ வாழ்க! அயலாரின் இரத்தத்தில் கையினைத் தோய்க்காமல், அயலாரைக் கொள்ளையடிப்பது தான் பணக்காரன் ஆகக் குறுக்கு வழி என்று கண்டு பிடிக்காத உனக்குத் தான் சமரசக் கொடி பிடித்து, நாகரிகப் படையின் முன்னணியில் வெற்றி நடை போடும் பெரும் பேறு கொடுத்து வைத்திருந்தது.